தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் ஒருவழியாக பீஹார் வந்தார் ராகுல்
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் ஒருவழியாக பீஹார் வந்தார் ராகுல்
UPDATED : அக் 30, 2025 04:57 AM
ADDED : அக் 30, 2025 04:30 AM

பீஹார் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கும் சூழலில், அந்த பக்கமே தலை காட்டாத ராகுல், இரு மாதங்களுக்கு பின், ஒருவழியாக நேற்று பிரசாரத்திற்காக வந்து சேர்ந்தார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட இம் மாநில சட்ட சபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட தேர்தல் வரும் நவ., 6ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதையொட்டி, லாலு வின் ஆர்.ஜே.டி., எனப் படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில் எதிர்க்கட்சிகளின், 'மஹாகட்பந்தன்' கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது .
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக காங்., - எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், பீஹார் முழுதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார்.
கடைசியாக செப்., 1ம் தேதி பீஹாரில் இருந்த அவர், அதற்கு பின் பீஹார் பக்கமே தலை காட்டவில்லை.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் சூடு பிடித்த நிலையில், கடந்த 25ம் தேதி தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, சமஸ்திபூரில் பிரசாரம் செய்தார்.
அதற்கு பிறகாவது ராகுல், பீஹார் பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் செல்லவில்லை.
இந்தச் சூழலில் கடந்த 59 நாட்களாக காணவில்லலை பீஹார் பக்கமே ராகுல் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பீஹார் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கும் சூழலில், ஒரு வழியாக ராகுல் நேற்று பீஹார் வந்து சேர்ந்தார். முஸாப்பூர் மற்றும் தர்பங்காவில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் பிரசாரத்தில் இறங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஓட்டுக்காக பிரதமர் மோடி எந்தவிதமான நாடகத்தையும் அரங்கிற்றுவார். நடனம் ஆடினால் தான் உங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று கூறி பாருங்கள். உடனடியாக அவர் பரத நாட்டியமே ஆடுவார்.
பீஷாரில் முதல்வர் நிதிஷகுமார் தலைமையில் ஆட்சி நடப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை பாஜ., உருவாக்கி இருக்கிறது. உண்மையில் அவரை வைத்து, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் பாஜ., தான் ஆட்சி நடத்தி வருகிறது. நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாததால், மக்கள் அனைவரும், 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்' லேயே மூழ்கி கிடக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காகவே, தொலை தொடர்பு துறையை ஒரு நிறுவனத்தின் வசமே அவர் வைத்து இருக்கிறார். இவ்வாறு ராகுல் பேசினார்.
-நமது டில்லி நிருபர் -

