கட்சி கூட்டத்துக்கு தாமதமாக வந்த ராகுலுக்கு தண்டனை
கட்சி கூட்டத்துக்கு தாமதமாக வந்த ராகுலுக்கு தண்டனை
ADDED : நவ 09, 2025 11:23 PM

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பச்மர்ஹியில் நடந்த காங்., கூட்டத்திற்கு தாமதமாக வந்த ராகுல், அதற்கு தண்டனையாக 10 தண்டால் எடுத்தார்.
மத்திய பிரதேசத்தில் காங்., தொண்டர்கள் கட்சி பணியாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டம், கட்சியின் பயிற்சி பொறுப்பாளர் சச்சின் ராவ் தலைமையில் நடந்தது. இதில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் பங்கேற்பதாக இருந்தது.
பயிற்சிக் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் துவங்கிய நிலையில், பீஹாரில் நேற்று மாலையுடன் ஓய்ந்த இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ராகுல் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இதனால், மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சி கூட்டத்தில் அவர் தாமதமாக பங்கேற்க நேர்ந்தது.
அப்போது தாமதமாக வருவது விதியை மீறிய செயல் என சச்சின் ராவ் கூற, அதற்கான தண்டனையை ஏற்கத் தயார் என ராகுல் பதில் அளித்தார். இதையடுத்து குறைந்தபட்சம் 10 தண்டாலாவது போட வேண்டும் என சச்சின் ராவ் பணித்தார். அதை ஏற்று, ராகுல் 10 தண்டால் எடுத்தார்.
ராகுலை போல, கூட்டத்திற்கு தாமதமாக வந்த மாவட்ட காங்., தலைவர்களும் உடல் வியர்க்க தண்டால் எடுத்தனர்.இதனால், காங்.,கின் பயிற்சி கூட்டம் வேடிக்கை கூட்டமாக மாறியது.

