ADDED : ஜூன் 14, 2026 06:16 AM

சென்னை: வளி மண்டல சுழற்சி காரணமாக, சென்னை உட்பட 15 மாவட்டங்களில், இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், வளி மண்டல சுழற்சி காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, வடக்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதன் வழியாக, ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதனால், இன்றும், நாளையும், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
