2050ம் ஆண்டிற்குள் கார்பன் மாசு குறைப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
2050ம் ஆண்டிற்குள் கார்பன் மாசு குறைப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
UPDATED : செப் 28, 2025 05:56 AM
ADDED : செப் 28, 2025 05:55 AM

சென்னை: ''மத்திய அரசு 2070ம் ஆண்டுக்குள், கார்பன் மாசு பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு 2050ம் ஆண்டுக்குள், அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறது,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நுாற்றாண்டு நினை வஞ்சலி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
நாட்டின் பெரும்பாலான மக்கள், பட்டினியால் காய்ந்தும், கால் வயிறு, அரை வயிறு சாப்பிட்டும் தவித்த காலத்தில், மக்களின் வயிறு நிறைய, மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை, இந்தியா என்றைக்கும் மறக்காது.
இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என, உலகமே அவரை அழைக்கிறது. நமக்கு அவர் உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும், எளிமையின் உருவமாகவும் இருந்தார். இன்றைக்கு உலகமே பேசும் காலநிலை மாற்றம் குறித்து, 50 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசியிருக்கிறார்.
இன்றைய இளைய தலைமுறையினருக்கு, 50, 60 ஆண்டுகளுக்கு முன், நாடு இருந்த நிலைமை தெரிய வாய்ப்பில்லை. விடுதலைக்கு பிறகு, இந்தியாவை கட்டமைத்து கொண்டிருந்த காலம் அது. மக்களின் உணவு தேவை, அவ்வளவு எளிதாக பூ ர்த்தி அடையவில்லை; பசியால் பலர் இறந்தனர். அந்த நிலைமை எல்லாம் இன்றைக்கு மாறியிருக்கிறது.
அதற்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னெடுத்த, பசுமை புரட்சியே முக்கிய காரணம். சத்தான மற்றும் பெரும் மக்கள் தொகையின் தேவையை தீர்க்கும் ஆற்றல் உள்ள பயிர்களை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய வேண்டும். வேளாண்மைக்கான நவீன கருவிகளை, குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை நாம் செய்தாக வேண்டும்.
இதற்கெல்லாம் அச்சாரமாக, தி.மு.க., அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. மத்திய அரசு, 2070ம் ஆண்டுக்குள் கார்பன் மாசு பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு, 2050ம் ஆண்டிற்குள் அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, பன்னீர் செல்வம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன், தலைமை தபால் துறை தலைவர் மரியம்மா தாமஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.