சேதமான சாலைகளை விரைவாக சீரமையுங்கள்: நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறைகளுக்கு கெடு
சேதமான சாலைகளை விரைவாக சீரமையுங்கள்: நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறைகளுக்கு கெடு
UPDATED : டிச 08, 2025 01:39 AM
ADDED : டிச 08, 2025 01:14 AM

சென்னை: 'சேதமான சாலைகளை, ஜனவரி மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும்' என, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு கெடு விதித்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலை துறை பராமரிப்பில், 65,000 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, பல ஆயிரம் கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.
மாநில நெடுஞ்சாலை துறை சாலைகளை இணைக்கும் வகையில், இந்த சாலைகள் அமைந்துள்ளன.
சென்னையில் மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள பல சாலைகளில், மெட்ரோ ரயில் கட்டுமானம், நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக மழைநீர் கால்வாய் கட்டுமானம், குடிநீர் வாரியம் வாயிலாக புதிய குழாய்கள் புதைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
இதனால், ஓராண்டுக்கு மேலாக அவை புதுப்பிக்கப்படாமல் சேதம் அடைந்து இருந்தன.
இந்நிலையில், சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையிடம், 600 கோடி ரூபாயை, மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கி உள்ளது.
இதேபோல, அரசு ஒதுக்கியுள்ள நிதி வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகளை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த சாலைகள் மேலும் சேதமடைந்துள்ளன. அவற்றில், மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பயணியர், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், சேதமான சாலைகளை செப்பனிடும்படி, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பருவமழை காலம் முடிந்ததும், ஜனவரி மாதத்தில் சாலைகளை முழுமையாக புனரமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்குள் சாலையை செப்பனிடும் பணியை முடித்து, அதன் விபரங்களை, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

