5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை, மின்வாரியம் முதலிடம்
5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை, மின்வாரியம் முதலிடம்
UPDATED : செப் 10, 2025 03:36 AM
ADDED : செப் 10, 2025 03:34 AM

மதுரை: தமிழகத்தில் 2021 முதல் 2025 மார்ச் வரை லஞ்சஒழிப்பு போலீசாரின் புள்ளிவிபரப்படி அரசுப்பணி செய்ய லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில் வருவாய்த்துறை, மின்வாரியம் முதல் 2 இடங்களில் உள்ளன.
வருவாய்த்துறை
'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் சில அதிகாரிகளின் அலுவலக மேஜைகளில் மட்டுமே காணமுடிகிறது. ஆனால் அதே அலுவலகங்களில் உயர்அதிகாரிகள் முதல் இளநிலை உதவியாளர் வரை பதவி வித்தியாசமின்றி லஞ்சம் வாங்கி வருகின்றனர். லஞ்சப்பணத்தில் அதிகாரிகள் சொத்து வாங்கி குவித்தது குறித்து லஞ்சஒழிப்பு போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கி கைதான பட்டியலில் முதல் இடத்தில் வருவாய்த்துறை உள்ளது.
சர்வே துறையில் 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை மொத்தம் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக மின்வாரியத்தில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் முதல் போர்மேன் வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சிகளில் குடிநீர் இணைப்பு, பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக கிளார்க் முதல் கிராம பஞ்., உதவியாளர் வரை 32 பேர் கைதாகி உள்ளனர்.
4வது இடத்தில் பத்திரப்பதிவு துறை உள்ளது. நிலமதிப்பை குறைத்து பதிவு செய்ய லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர், உதவியாளர் என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரில் 3 பேர் கைதாகி உள்ளனர். கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, அறநிலையத்துறையில் தலா 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.