ADDED : ஜூலை 17, 2026 04:32 AM

கோவை: திருநெல்வேலி, தச்சநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர், கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்துள்ளார்.
அந்த வாகனத்தை ரவிக்குமார் தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதாக தெரியவந்ததால், அவருக்கு தெரியாமல், மாற்று சாவி வாயிலாக, தன் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, ரவிக்குமார், கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, சிறப்பு எஸ்.ஐ., பூபதி, 52 விசாரித்துள்ளார். அப்போது, ருஜைனா பேகம் மற்றும் அவரின் கணவர் மொபைல் போன்களை கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த புகாரை முடித்து வைக்கவும், மொபைல் போன்களை திரும்ப ஒப்படைக்கவும், தனக்கு, 70 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என, கேட்டுள்ளார். இது தொடர்பாக ருஜைனா பேகம், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தம்பதியிடம் நேற்று பூபதி, லஞ்சப் பணத்தை வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.
