ஆர்எஸ்எஸ் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல; மோகன் பகவத் பேச்சு
ஆர்எஸ்எஸ் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல; மோகன் பகவத் பேச்சு
UPDATED : டிச 10, 2025 06:56 PM
ADDED : டிச 10, 2025 06:49 PM

திருச்சி: ''ஆர்எஸ்எஸ் ஹிந்து சமுதாயத்தினரை முன்னேற்றுவதற்கான அமைப்பு. வேறு எந்த மதத்துக்கும் எதிரானது கிடையாது,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நிர்வாகிகளை சந்திக்கும் அவர், எதிர்கால செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து உரையாடி வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக தமிழகம் வந்துள்ள மோகன் பகவத், நேற்று சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் அவர் பங்கேற்றார். அப்போது மோகன் பகவத் பேசியதாவது;
ஆர்.எஸ்.எஸ் எந்த அதிகாரத்திற்கும் போட்டியாக இருந்தது இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராக தொடங்கப்பட்டது என்று சிலர் சொல்கிறார்கள். கிறிஸ்துவர்கள், பிரிட்டிஷ்காரர்கள் ஆகியோருக்கு எதிராக தொடங்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். அதிலும் கூட உண்மையில்லை.
ஆர்.எஸ்.எஸ் கட்டாயம் ஹிந்துக்களுக்கானதுதான். ஹிந்து சமுதாயத்தை முன்னேற்றுவதற்கானது. ஆனால் அது வேறு எந்த மதத்திற்கும் எதிரானது என்று அர்த்தம் அல்ல.
இங்கு ஆரோக்கியமான சமுதாயம் இல்லை என்றால், அதை ஆரோக்கியமானதாக உருவாக்க வேண்டும். நான் என் உடலை வலுவாக வைத்துக் கொள்கிறேன் என்றால் அது பிறரை தாக்குவதற்காக அல்ல.
யாராவது என்னை தாக்கினால் அந்த வலு என்னை காப்பாற்றும், பயனுள்ளதாக இருக்கும். யாரையாவது தாக்க வேண்டும் என்பது அதன் உள்நோக்கம் அல்ல.
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

