ADDED : செப் 08, 2025 12:35 AM

கீவ்:உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அரசு கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யாவின் எண்ணெய் குழாய் வழிதடத்தின் மீது உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது.
இந்நிலையில், கீவ் நகரில் உள்ள அரசு கட்டடத்தின் மீது ரஷ்யா நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், அக்கட்டடம் தீப்பிடித்து சேதம் அடைந்ததாக உக்ரைன் கூறியுள்ளது.
இது குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
நேற்று இரவு முதல் ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லைகளைத் தாண்டி 800க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 13 ஏவுகணைகள், 4 பாலிஸ்டிக் உள்ளிட்ட ஆயுதங்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இதில், தலைநகர் கீவில் உள்ள பல அரசு கட்டடங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன. மேலும், குடியிருப்பு கட்டடங்களும் தீக்கிரையாகியுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கீவ் நகரின் மீதான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 18 பேர் காயமடைந்தனர் என்றும், தாக்குதலில் அரசு அலுவலகம், குடியிருப்பு கட்டடங்கள் உட்பட பல்வேறு கட்டங்கள் தீப்பிடித்து எரிந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ரஷ்யா வேண்டுமென்றே பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இத்தா க்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் வினியோகம் நடைபெறும் குழாய் வழித்தடம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில், குழாய்கள் கடுமையான சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கு இடையே போர் துவங்கியதில் இருந்து, ரஷ்யா ஒரு அரசு கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் உக்ரைனின் பதில் தாக்குதலால், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் கடுமை யாகக் கூடும் என தெரிகிறது-.