ரஷ்யா தாக்குதல்: பென்சன் வாங்க காத்திருந்த உக்ரைன் நாட்டினர் 21 பேர் பலி
ரஷ்யா தாக்குதல்: பென்சன் வாங்க காத்திருந்த உக்ரைன் நாட்டினர் 21 பேர் பலி
UPDATED : செப் 09, 2025 07:56 PM
ADDED : செப் 09, 2025 06:27 PM

கீவ்: கிளிட் வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா நடத்திய தாக்குதலில் பென்சன் வாங்க காத்திருந்த 21 முதியவர்கள் உயிரிழந்தனர். 21க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன. அதிபர் டிரம்ப்புடன், ரஷ்ய அதிபர் புடின் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் பிறகு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகளவிலான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.இதனால், அந்நாடு மீது கூடுதலாக தடை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், உக்ரைனின் டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள யரோவா என்ற கிராமத்தில் கிளிட் வெடிகுண்டுகளை ரஷ்யா வீசி தாக்குதல் நடத்தியது. இந்த வகை குண்டுகளின் சிலவற்றின் எடை 1,360 கிலோ வரை இருக்கும். போர் துவங்கிய 2022ம் ஆண்டுக்கு பிறகு ரஷ்யா முதலில் பயன்படுத்திய வெடிகுண்டை விட இது 6 மடங்கு பெரியது ஆகும்.இந்த தாக்குதலில் பென்சன் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டு இருந்த 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கோபமடைந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் இன்னும் அமைதியாக, செயலற்று இருக்கக்கூடாது. அமெரிக்கா பதிலளிக்க வேண்டும். ஐரோப்பாவிடம் இருந்தும் ஜி20 அமைப்பிடம் இருந்தும் பதில் தேவை. இறப்புகளை நிறுத்த ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தாக்குதல் நடத்தப்பட்ட டோனெட்ஸ்க் பகுதியை முதலில் ரஷ்யா கைப்பற்றியது. பிறகு உக்ரைன் படைகள் கடுமையாக போராடி அந்நகரை மீண்டும் கைப்பற்றின.