சிறார்களின் கொலை வெறித் தாக்குதல் ஒட்டு மொத்த தமிழினத்திற்கான தலைகுனிவு; சீமான்
சிறார்களின் கொலை வெறித் தாக்குதல் ஒட்டு மொத்த தமிழினத்திற்கான தலைகுனிவு; சீமான்
ADDED : டிச 30, 2025 05:52 PM

சென்னை: திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான போதை சிறார்களின் கொலைவெறித் தாக்குதல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கான தலைகுனிவு என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தம்பி சிராஜ் மீது, போதைப் பழக்கத்திற்கு அடிமையான நான்கு இளம் சிறார்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது. திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது.
வட மாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும். தமிழகத்தில் அரசே நடத்தும் மலிவுவிலை மதுக்கடைகளால் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் வேகமாகப் பெருகி வருகின்றன. கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழகம் மாறியுள்ளது.
நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் டாஸ்மாக் மது மற்றும் கஞ்சா போதையில்தான் நடைபெறுகிறது. எனவே அரசு மது விற்பனையைத் தடைசெய்தாலே 95% கொடுங்குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும். அதிமுக ஆட்சியில் குட்காவுக்கு எதிராக சட்டமன்றம் வரை பேசிய திமுக, தன்னுடைய ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை குறித்து வாய் திறவாதது ஏன்?
மக்களின் நலனைவிட மதுவினால் வரும் வருமானம்தான் திமுக அரசிற்கு முதன்மையானதா? இதற்குப் பெயர்தான் திராவிட மடலா? வெட்கக்கேடு?
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

