தொடர் தோல்வி: பிரியங்கா உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?
தொடர் தோல்வி: பிரியங்கா உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?
ADDED : டிச 15, 2025 08:57 PM

புதுடில்லி: காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா, தேர்தல் வியூக நிபுணரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த அக்கட்சி, கடைசியாக பீஹார் சட்டசபை தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. இத்தேர்தலில் ராகுல் எழுப்பிய ஓட்டுத் திருட்டு, எஸ்ஐஆர் விவகாரம் உள்ளிட்டவை எதுவும் எதிரொலிக்கவில்லை.
அதேபோல், பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோரும், பீஹாரில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜன் சுராஜ் கட்சி என தனிக்கட்சி துவக்கினார். நடைபயணம், பிரசாரம், தேர்தல் வியூகம் என அவரின் எந்த திட்டமும் இந்த தேர்தலில் எதிரொலிக்கவில்லை. அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்தது.
இச்சூழ்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு, டில்லியில் சோனியாவின் இல்லத்தில் பிரியங்காவும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இரு தரப்பும் இது குறித்து உறுதிபடுத்தவில்லை. பிரியங்கா கூறும்போது, நான் யாரை சந்திக்க விரும்புகிறேன் அல்லது சந்திக்கவிரும்பவில்லை என்பதை தெரிந்து கொள்ள யாருக்கும் ஆர்வம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.இருவரும் சந்திப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2022ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பது தொடர்பாக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காங்கிரசில் அவர் சேர்வதாக இருந்தது.
காங்கிரசை சீரமைப்பது குறித்து சோனியாவிடம் அறிக்கை ஒன்றை பிரசாந்த் கிஷோர் அளித்து இருந்தார். இது குறித்து ஆராயவும், கட்சி சந்திக்கும் சவாலை சரி செய்வது குறித்தும் குழு ஒன்றை அமைப்பதாக சோனியா தெரிவித்து இருந்தார். இந்த குழுவில் இடம்பெற பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு அனுமதி கிடைக்காத காரணத்தினால், பேச்சுவார்த்தை நின்று போனது. காங்கிரஸ் கட்சியில் சேரும் எண்ணத்தை பிரசாந்த் கிஷோர் கைவிட்டார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்து வரும் பிரசாந்த் கிஷோர், டில்லியில் பிரியங்காவை சந்தித்து பேசியதாக வெளியான தகவல், இரு கட்சி வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

