அல் பலாஹ் பல்கலையில் பட்டம் பெற்ற முக்கிய பயங்கரவாதி; வெளியான அதிர்ச்சி தகவல்
அல் பலாஹ் பல்கலையில் பட்டம் பெற்ற முக்கிய பயங்கரவாதி; வெளியான அதிர்ச்சி தகவல்
ADDED : நவ 20, 2025 01:10 PM

புதுடில்லி: டில்லி தற்கொலைப்படை தாக்குதல் குற்றவாளியைப் போலவே, 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதியும், அல் பலாஹ் பல்கலையில் படித்து பட்டம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த நவ.,10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் மூன்று டாக்டர்கள் உள்பட, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்து வெடிக்க செய்த டாக்டர் உமர் நபி மற்றும் கைதான டாக்டர்களுக்கு ஹரியானா மாநிலம் பரிதாபாதில் இயங்கி வரும் அல் பலாஹ் பல்கலையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதன் ஒருபகுதியாக, அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், அல் பலாஹ் பல்கலையில் போலி நிறுவனங்கள் மூலம் பண மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அல் பலாஹ் பல்கலை தலைவர் ஜாவத் அகமது சித்திக்கை 13 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதேவேளையில், பல்கலை மானிய கமிஷனால், அல் பலாஹ் பல்கலை அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், 2008ம் ஆண்டு டில்லி மற்றும் ஆமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி மிர்சா ஷதாப் பெய்க், அல் பலாஹ் பல்கலையில் படித்து பட்டம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் அசாம்ஹர் மாவட்டம் பரிடி கிராமத்தைச் சேர்ந்த இவன், ஆரம்பத்தில் 9ம் வகுப்பில் பெயில் ஆனான். அதன்பிறகு, 12ம் வகுப்பை முடித்த பெய்க், 2007ம் ஆண்டு அல் பலாஹ் பொறியியல் கல்லூரியில் டி.டெக்., மின்னணுவியல் மற்றும் கருவியியல் பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளான்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் அசாம்ஹர் பகுதிக்கு தலைமை தாங்கிய மிர்சா ஷதாப் பெய்க், தற்போது பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், சவுதி அரேபியாவிலும் அவன் சிறிது காலம் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
2008ம் ஆண்டு போலீஸ் அளித்த தகவல்களின் அடிப்படையில், பயங்கரவாத அமைப்புகளில் தனது உறவினரான ஷாகிப் நிஸார் உள்பட பல இளைஞர்களை மிர்சா ஷதாப் பெய்க் சேர்த்துள்ளான். அசாம்ஹரைச் சேர்ந்த அதிப் அமீன் தலைமையிலான பயங்கரவாத அமைப்பையும், டில்லியில் மாணவர்கள் அடங்கிய பயங்கரவாத அமைப்பையும் ஒன்றிணைத்ததில் பெய்க் முக்கிய பங்காற்றியுள்ளான். டில்லி மற்றும் ஆமதாபாத் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டுள்ளான்.
அதுமட்டுமில்லாமல், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புக்கு தேவையான வெடிபொருட்களை உருவாக்க ஐஎம் பயங்கரவாதிகள் ரியாஸ் மற்றும் யாஸின் பட்கலுக்கு உதவியுள்ளான். புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியவர்களில் மிர்சா ஷதாப் பெய்க்கும் ஒருவன்.
டில்லியின் ஜாகிர் நகரில் பெய்க் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது, அடையாள அட்டைகள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பட்லா வீட்டில் நடத்தப்பட்ட என்கவுன்டரின் போது, 2008 தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மிர்சா ஷதாப் பெய்க் மற்றும் முகமது காலித் ஆகியோர் மட்டும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
2008ல் ஆமதாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 56 பேரும், டில்லியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேரும் கொல்லப்பட்டனர்.

