ADDED : அக் 02, 2025 11:30 PM

மும்பை: மஹாராஷ்டிராவில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் விடிய, விடிய செயல்பட மாநில அரசு அனுமதித்துள்ளது. அதேநேரத்தில் மதுக்கடைகள் மற்றும் பார்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
மஹாராஷ்டிராவில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவில் செயல்படுவதை போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் தடுப்பதாக மாநில அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து வணிக செயல்பாட்டை ஊக்கப் படுத்தும் வகையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட மாநில அரசு அனுமதித்து உள்ளது.
புதிய நடைமுறையை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து மாநில தொழிற்சாலைகள், எரிசக்தி, தொழிலாளர் மற்றும் சுரங்கத்துறை நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை:
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் இனி 24 மணி நேரமும் திறந்திருக்கலாம்.
மதுக்கடைகள், பார்கள், பீர் பார்கள், உணவகங்களில் இயங்கும் மதுக் கூடங்கள் இரவில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் செயல்படும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மும்பை, புனே, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஹோட்டல்கள், கபேக்கள், சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை இனி நேரக்கட்டுப்பாடின்றி சுதந்திரமாக செயல்படும்.