ஸ்லோவேகியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
ஸ்லோவேகியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
UPDATED : ஜூன் 16, 2026 11:36 AM
ADDED : ஜூன் 16, 2026 12:01 AM

பிராடிஸ்லாவா: ஸ்லோவேகியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்; பிராடிஸ்லாவா நகரில் நடந்த நிகழ்ச்சியில் 'ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ்' என்ற அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டதை எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். இந்த உயரிய விருதுக்காக ஸ்லோவேகியா நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் சொந்தமானதாகும். இந்த மிகச்சிறந்த அங்கீகாரத்தை இந்தியா மற்றும் ஸ்லோவேகியா நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நீடித்த நட்புறவுக்காக அர்ப்பணிக்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு விருது வழங்கப்பட்டதை, இந்தியாவிற்கு மற்றுமொரு மாபெரும் பெருமையான தருணம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில்; ஸ்லோவேகியா நாட்டின் மிக உயரிய கவுரவமான 'ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ்' விருதைப் பெற்ற பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவர் பெற்றுள்ள இந்த 33வது சர்வதேச விருது, உலகெங்கிலும் நட்புறவுப் பாலங்களை உருவாக்கி, உலகளாவிய தலைவராக இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்திய அவரது சிறந்த ராஜதந்திரத்திற்கு சான்றாக விளங்குகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
