இறந்த நிலையில் சமூகம்: ராகுல் கருத்தால் மீண்டும் சர்ச்சை
இறந்த நிலையில் சமூகம்: ராகுல் கருத்தால் மீண்டும் சர்ச்சை
ADDED : டிச 24, 2025 05:20 PM

புதுடில்லி: ''நாம் ஒரு இறந்த பொருளாதாரமாக மாறுவது மட்டுமல்லாமல், மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு இறந்த சமூகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறோம்'', என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
2017 ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி உத்தர பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் பாஜ எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்காரால் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கை உ.பி.,யில் இருந்து டில்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2019ம் ஆண்டு எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனிடையே, குல்தீப் சிங் செங்கார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் தாயார் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இன்று அவர்கள் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். மண்டி ஹவுஸ் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக அவர்கள் பஸ்சில் பயணித்தனர். ஆனால், அந்த இடத்தில் பஸ் நிற்கவில்லை.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியாகி உள்ளது அதில் அந்த பெண்ணின் தாயார் ஓடும் பஸ்சில் இருந்து குதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களை கொல்ல முயற்சி நடக்கிறது. போராட்டம் நடத்த கிளம்பிய எங்களை பாதுகாப்புப்படையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவரை கையாளும் முறை இதுதானா? நீதிக்காக குரல் எழுப்பும் துணிச்சல் அவருக்கு இருப்பது தான் அவருடைய குற்றமா? குறிப்பாக பாதிக்கப்பட்டவர் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்பட்டு பயத்தின் நிழலில் வாழ்ந்து வரும குற்றவாளிக்கு( பாஜ முன்னாள் எம்எல்ஏ) ஜாமின் வழங்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. வெட்கக்கேடானது.
பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்குவதும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துவதும் என்ன வகையான நீதி. நாம் ஒரு இறந்த பொருளாதாரமாக மாறுவது மட்டுமல்லாமல்,இதுபோன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்களால் ஒரு இறந்த சமூகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறோம்.ஜனநாயகத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்புவது ஒரு உரிமை. அடக்குவது குற்றம்.பாதிக்கப்பட்டவருக்கு மரியாதை, பாதுகாப்பு மற்றும் நீதிக்கு தகுதியானவர். உதவியற்ற நிலை, பயம் மற்றும் அநீதிக்கு அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் என ராகுல் கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் அவர் தற்போது இறந்த சமூகம் எனக்கூறி மீண்டும் சச்சரவை ஏற்படுத்தி உள்ளார்.

