அய்யப்பன் கோவில் தங்க கவசம் எடை குறைந்த விவகாரத்தில் மர்மம்; பகீர் கிளப்பிய சசி தரூர்
அய்யப்பன் கோவில் தங்க கவசம் எடை குறைந்த விவகாரத்தில் மர்மம்; பகீர் கிளப்பிய சசி தரூர்
ADDED : அக் 07, 2025 08:29 AM

திருவனந்தபுரம்; சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடக்கும் சம்பவங்களில் ஏதோ சந்தேகம் உள்ளதாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் பகீர் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் கருவறை முன்பாக உள்ள துவார பாலகர்கள் சிலைக்கு தங்கமுலாம் பூசிய செப்பு கவசங்களை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் நன்கொடையாக வழங்கினார்.
இந்த கவசத்தை பழுது பார்த்து, 'எலக்ட்ரோ பிளேட்டிங்' செய்ய, சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுப்பி வைத்தது. அப்போது தேவசம் போர்டு ஆணையரின் அனுமதியின்றி, தங்க கவசம் கழற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதனால், சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க கவசங்களை உடனடியாக திரும்ப கொண்டு வருமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதே நேரம், தங்க கவசத்தின் எடை 4 கிலோ வரை குறைந்து இருப்பதாக புகார் எழுந்தது. மேலும், துவார பாலகர்களின் தங்க பீடமும் மாயமானதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேவசம் போர்டின் ஊழல் தடுப்பு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய ஊழல் தடுப்புக் குழு, காணாமல் போனதாக கூறப்பட்ட தங்க பீடத்தை, நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்டது.
பழுது பார்த்த பின், பீடம் சரியாக பொருந்தாததால், மீண்டும் தேவசம் போர்டு தன் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியதாகவும், அந்த விவகாரத்தை தான் மறந்து போனதாகவும் உன்னிகிருஷ்ணன் போத்தி விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பாக இரண்டு நாட்கள் வரை உன்னி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய தேவசம் போர்டு ஊழல் தடுப்புக் குழு, கேரள உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.
இதை தொடர்ந்து துவார பாலகர்கள் சிலையில் அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்தது குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள உயர் நீதிமன்றம் அமைத்தது.
இந் நிலையில், இந்த சம்பவங்கள் என்ன நடந்தது என்பது குறித்து மிகவும் அதிர்ச்சியூட்டும் சில விவரங்களை நாங்கள் கேள்விப்பட்டு வருகிறோம் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் பகீர் கிளப்பி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;
என்ன நடக்கிறது? இதில் ஏதோ மர்மம் உள்ளது என்பதை கேரள மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். பல கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் ஆகும்.
ஐகோர்ட் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், உண்மையில் கேரளாவில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் இதுகுறித்து மிகவும் கவலைப்படுவர்.
என்ன நடந்திருக்கும் என்பது பற்றிய அதிர்ச்சிகர தகவல்களை நாங்கள் கேட்டு வருகிறோம். தற்போதைய அரசாங்கத்தின் நடைமுறையில் உள்ள சிக்கலான சில பிரச்னைகளே இதற்கு காரணமாக இருக்கலாம். இதற்கு அரசு கட்டாயம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறி இருக்கிறார்.