ADDED : ஆக 23, 2026 02:31 AM

புதுடில்லி: பொ து வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், தன்னை பற்றி அதிகம் வெளியே சொல்லாதவர், காங்., மூத்த தலைவர் சோனியா. 79 வயதாகும் அவர், தன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். இந்த சுயசரிதை, நவ., 10ல் வெளியாகிறது. 500 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை, பிரபல அமெரிக்க பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகத்தின் பெயர், 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்'. இது ஆடியோ புத்தகமாகவும் வெளியாகிறது.
ராஜிவை சந்தித்தது, அவருடன் ஏற்பட்ட காதல், மாமியார் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டது, ஸ்ரீபெரும்புதுாரில் புலிகளால் ராஜிவ் கொலை செய்யப்பட்டது, அதற்கு பின் அரசியலில் தான் எதிர்கொண்ட பிரச்னைகள் என, பலவற்றையும் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளாராம் சோனியா.
'தமிழகம் குறித்தும் இதில் அதிக குறிப்புகள் உள்ளதாம். ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டபோது, சம்பவ இடத்தில் இருந்தவர், காங்., தலைவர் மரகதம் சந்திரசேகர். இவர், சோனியாவிற்கு போன் செய்து என்ன கூறினார் போன்ற விபரங்கள் இந்த புத்தகத்தில் இருக்கும்' என்கின்றனர் காங்., மூத்த தலைவர்கள்.
வெளிநாடுகளில் இந்த புத்தகம் அதிகமாக விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தகத்தின் வாயிலாக கிடைக்கும் பணம், பிரியங்காவிற்கு செல்ல வேண்டும் என, சோனியா சொல்லி விட்டாராம்.
'இந்த புத்தகத்தை படித்தால், நிச்சயம் சோனியா மீது மட்டுமன்றி, காங்., மீதும் பரிவு உண்டாகும். காங்கிரசை விட்டு விலகிச் சென்ற வாக்காளர்கள், மீண்டும் காங்கிரசுக்கு திரும்புவர். 2027ல் உ.பி., உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அந்த தேர்தல்களில் இந்த புத்தகம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, காங்., மீண்டும் வெற்றி பெற வாய்ப்பை உண்டாக்கும்' என, காங்., மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
வரும், 2029 லோக்சபா தேர்தலில், காங்., நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; ராகுல் தான் பிரதமர் என, காங்கிரஸ்காரர்கள் சத்தியம் செய்யாத குறையாக சொல்கின்றனர். அதற்கு சோனியாவின் சுயசரிதை ஒரு அடித்தளம் என, காங்கிரசுக்குள் பேச்சு அடிபடுகிறது.
