சபாநாயகர் தேநீர் விருந்து: பிரதமர் மோடியுடன் பிரியங்கா சந்திப்பு
சபாநாயகர் தேநீர் விருந்து: பிரதமர் மோடியுடன் பிரியங்கா சந்திப்பு
ADDED : டிச 19, 2025 05:51 PM

புதுடில்லி: பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிந்த நிலையில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா இன்று தேநீர் விருந்தளித்தார். இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் காங்கிரஸ் எம்பி பிரியங்கா கலந்துரையாடினர்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிச., 1 ல் துவங்கி இன்று( டிச.,19) நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, 'விபி ஜி ராம் ஜி' மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன. கூட்டம் துவங்கிய போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடபட்டன. பின்னர் விவாதத்தில் அக்கட்சிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு பார்லிமென்ட் கூட்டத்தொடர் நிறைவு பெறும் போதும், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா எம்பிக்களுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்றும் ஓம்பிர்லா தேநீர் விருந்து அளித்தார். கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை எதிர்க்கட்சி எம்பிக்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர். பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருகே காங்கிரஸ் எம்பி பிரியங்கா அமர்ந்திருந்தார். சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, எம்பிக்களிடம் பிரியங்கா பேசும் போது தனக்கு உடலில் உள்ள அலர்ஜிக்காக தனது தொகுதியான வயநாட்டில் இருந்து வரும் மூலிமை மருந்தை எடுத்துக் கொள்வதாக கூறினார். இதனை மோடியும், ராஜ்நாத்தும் சிரித்தபடி கவனித்தனர்.பிறகு, எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்து மோடியிடம் பிரியங்கா கேட்டார்.அதற்கு மோடி, பயணம் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்தார்.
பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்க முன்னேற்பாடுகளுடன் வந்த கொல்லம் தொகுதி எம்பி என்கே பிரேமசந்திரனை மோடி பாராட்டினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில எம்பிக்கள், மோடியிடம் பழைய பார்லிமென்டில் உள்ளது போன்று பழைய மற்றும் இன்னாள் எம்பிக்கள் கலந்துரையாடும் மைய மண்டபம் உள்ளதுபோல் புதிய பார்லிமென்டிலும் தேவை என்றனர். இதற்கு பதிலளித்த மோடி ' அந்த மண்டபம் ஓய்வு பெற்றவர்களுக்கானது. நீங்கள் இன்னும் சேவை செய்ய வேண்டியுள்ளது ' எனக்கூற எம்பிக்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

