வாரணாசியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்
வாரணாசியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்
ADDED : அக் 30, 2025 11:43 PM

வாரணாசி:  'பொது இடத்தில் எச்சில் துப்பினால், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, உத்தர பிரதேசத்தின் வாரணாசி மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள வாரணாசி லோக்சபா தொகுதியில் தான் பிரதமர் மோடி போட்டியிட்டு வென்றார். மாநகராட்சியான வாரணாசியை சுத்தமாக வைத்திருக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகளை மாநகராட்சி நிர்வாகம் புதிதாக அமல்படுத்தியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் சந்திப் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
புதிய விதிகளின்படி தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தெரு நாய்களுக்கு உணவு வைத்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு, 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், 24 மணி நேரத்துக்கும் அதிகமாக குப்பையை வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது பூங்கா, சாலைகள், சாலை தடுப்புகளில் குப்பையை வீசினாலோ, 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும்.
வளர்ப்பு நாய்களை, 'வாக்கிங்' அழைத்துச் செல்லும்போது, அது பொது இடத்தில் மலம் கழித்தால் அதை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத நாய் உரிமையாளருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கட்டட இடிபாடுகள் அல்லது குப்பையை லாரிகளில் மூடாமல் எடுத்துச் சென்றாலோ அல்லது மாநகராட்சி வாகனங்கள், குப்பை தொட்டிகளை சேதப்படுத்தினாலோ, 2,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்க அனுமதித்தல், சுகாாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற குற்றச்செயலுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

