டில்லியில் படித்த ஹிந்து கல்லுாரியில் இலங்கை பிரதமரின் மலரும் நினைவுகள்
டில்லியில் படித்த ஹிந்து கல்லுாரியில் இலங்கை பிரதமரின் மலரும் நினைவுகள்
ADDED : அக் 17, 2025 12:56 AM

புதுடில்லி: இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, டில்லியில், 30 ஆண்டுகளுக்கு முன் தான் படித்த ஹிந்து கல்லுாரிக்கு நேற்று மீண்டும் வந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
இவர் 1991 -- 94 வரை டில்லி பல்கலையின் கீழ் செயல்படும் ஹிந்து கல்லுாரியில் சமூகவியல் துறையில் கல்வி பயின்றார்.
அந்த கல்லுாரிக்கு நேற்று இலங்கை பிரதமராக ஹரிணி மீண்டும் வருகை புரிந்தார். அவருக்கு கல்லுாரி மாணவர்கள் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.
அதன் பின், தான் படித்த வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன் அமர்ந்து தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். கல்லுாரியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்களிடையே பேசியதாவது:
நாடோ, வீடோ, அலுவலகமோ சக மனிதர்களிடையே பாலம் எழுப்புங்கள். சுவர் எழுப்பாதீர்கள். பிரிவினையை விட இணைப்பை முன்னிறுத்துங்கள்.
இலங்கை சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. அது ஒரு இருண்ட காலம். அப்போது உண்மையான நண்பனாக இந்தியா ஆதரவு கரம் நீட்டியது.
இந்தியா மற்றும் இலங்கை நாகரிக, கலாசார உறவால் இணைந்த அண்டை நாடுகள். ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது குடிமக்களாகிய நம் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.