'ஸ்டார்ட்அப் டிஎன்' தலைமை பதவி: த.வெ.க.,வினரிடையே கடும் போட்டி
'ஸ்டார்ட்அப் டிஎன்' தலைமை பதவி: த.வெ.க.,வினரிடையே கடும் போட்டி
ADDED : ஆக 18, 2026 06:13 AM

சென்னை: தமிழகத்தில், 'ஸ்டார்ட் அப்' தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும், தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி பதவியை பிடிக்க, த.வெ.க., நிர்வாகிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை தொடங்கி வருகின்றனர். அவர்களுக்கு தேவையப்படும் நிதியுதவி, முதலீட்டாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட உதவிகளை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வழங்குகிறது.
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியாக ஒப்பந்த அடிப்படையில், தொழிலில் நிபுணத்துவம் வாய்ந்தவர் நியமிக்கப்படுகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன், கடந்த ஜூனில் ராஜினாமா செய்தார்.
புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்க, தமிழக அரசு விண்ணப்பங்களை பெற்றுள்ளது. இந்த பதவியை பிடிக்க, த.வெ.க., நிர்வாகிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
புத்தொழில் முனைவோர் கூறியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில் கூட, ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, கட்சி சார்ந்த நபரை நியமிக்கவில்லை. அந்நிறுவனத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாததால், 2021ல், 2,032 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்த தமிழகத்தில் தற்போது, 15,000ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலை என, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் கலை அறிவியல் துறைகளில் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால் தான் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அவர்களில் பலர் சுய தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே, ஸ்டார்ட் அப் நிறுவனம், அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும். இதனால், தகவல் தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களை, தலைமை செயல் அதிகாரியாக அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
