டில்லியில் உயிரிழந்தோருக்கு இழப்பீடு அறிவித்தது மாநில அரசு
டில்லியில் உயிரிழந்தோருக்கு இழப்பீடு அறிவித்தது மாநில அரசு
ADDED : நவ 11, 2025 09:17 PM

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் வெடிகுண்டு வழக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
டில்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது என பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், நிரந்தரமாக ஊனம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என டில்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

