ADDED : நவ 23, 2025 03:11 AM

சபரிமலை: கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் விரைவு அதிரடிப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந்த, 17ல் திறக்கப்பட்டது.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேரள போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் டிச., 27ல் மண்டல பூஜையும், 2026 ஜனவரி 14ல் மகர விளக்கு பூஜையும் நடக்கிறது.
இதையொட்டி, தமிழகத்தின் கோவையில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் முகாமில் இருந்து, 140 பேர் அடங்கிய ஆர்.ஏ.எப்., எனப்படும் விரைவு அதிரடிப்படை போலீசார் துணை கமாண்டர் பிஜுராஜ் தலைமையில் சபரிமலை சென்றுள்ளனர். அவர்கள் சந்திதானம் மற்றும் மரக்கூட்டம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், மகர விளக்கு பூஜை நிறைவடையும் வரை கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியிலும், பக்தர்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுவர். இது தவிர அவசர நிலையை கையாளும் விதமாக, 10 உறுப்பினர்கள் அடங்கிய கியூ.ஆர்.டி., எனப்படும் விரைவு நடவடிக்கை குழுவினர், 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர்.

