டில்லி கலவர வழக்கு: சர்ஜில் இமாம், உமர் காலித்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு
டில்லி கலவர வழக்கு: சர்ஜில் இமாம், உமர் காலித்துக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் மறுப்பு
ADDED : ஜன 05, 2026 12:00 PM

புதுடில்லி: 2020ம் ஆண்டு டில்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் உள்ள உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோருக்கு சுப்ரீம்கோர்ட் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து , டில்லியில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட 15 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனக்கூறி பல்வேறு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜனவரி 05) தீர்ப்பு அளித்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ' உமர் காலித் மற்றும் சர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஜாமின் வழங்க முடியாது. இருவரும் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகின்றனர். இவர்கள் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யலாம்' என தெரிவித்தனர். இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
அதேநேரத்தில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குல்பிஷா பாத்திமா, மீரா ஹைதர், ஷிபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு மட்டும் நீதிபதிகள் ஜாமின் வழங்கினர்.

