நவம்பர் மாத பங்கீட்டு நீரை திறந்து விடுங்கள் காவிரி ஆணையத்தில் தமிழக அரசு கோரிக்கை
நவம்பர் மாத பங்கீட்டு நீரை திறந்து விடுங்கள் காவிரி ஆணையத்தில் தமிழக அரசு கோரிக்கை
UPDATED : நவ 07, 2025 01:16 AM
ADDED : நவ 07, 2025 01:14 AM

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நவம்பர் மாதத்தில், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான, 13.78 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்துவிட நடவடிக்கை எடுக்கும்படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
'வீடியோ கான்பரன்ஸ்' காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின், 45வது ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியம் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.
அப்போது, மேட்டூர் அணையின் நீர் இருப்பு, 89.741 டி.எம்.சி., அளவாக இருக்கிறது என்பதோடு, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 6,401 கன அடியாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வலியுறுத்தல் தவிர, விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக, வினாடிக்கு, 18,427 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்ற விபரமும் அளிக்கப்பட்டது.
மேலும், கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து ஆகியவை, கணிசமான அளவுக்கு சிக்கலின்றி தொடர்ந்து வருகிறது.
இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நவம்பர் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான, 13.78 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும். அதற்கான நடவடிக்கையை தாமதமின்றி எடுக்க வேண்டும்.
இந்த நவம்பர் மாத பங்கீட்டு நீரின் அளவை, தமிழக - கர்நாடக எல்லையான பில்லி குண்டுலுவில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப் பட்டது.
-நமது டில்லி நிருபர்-

