ADDED : மே 07, 2026 03:41 PM

சென்னை: ஆட்சியமைக்க ஆதரவு அளிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து தவெக இணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனுடன் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சியமைக்க ஆதரவு கோரும் கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; ஏற்கனவே இமெயில் மூலமாக ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியிருந்தோம். தற்போது, அந்தக் கடிதத்தை நேரில் சந்தித்து கொடுத்துள்ளேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிகவும் ஆலோசித்து முடிவை சொல்வார்கள். கண்டிப்பாக நேரில் ஒருமுறை சந்தித்து கோரிக்கை வைப்போம். சட்டப்படி, அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கட்சிக்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும். தமிழக மக்கள் விஜய் முதல்வராக வேண்டும் என்று ஓட்டு போட்டுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
கவர்னர் எங்களை அழைக்கவில்லை. நாங்கள் தான் இன்று மீண்டும் ஒருமுறை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியிடமும் ஆதரவு கேட்டுள்ளோம். என்டிஏ கூட்டணி கட்சிகளிடன் இதுவரையில் ஆதரவு கோரவில்லை. அந்த எண்ணமும் எங்களிடம் இல்லை.
ஏற்கனவே ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் எங்களின் முதல் மாநாட்டிலேயே சொல்லி விட்டார். அனைத்துக் கட்சிகளுக்கும் அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற ஆட்சியில் பங்கு இருந்தால் தான் செய்ய முடியும். அதற்கான பங்கீடு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தவெகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். ஒட்டு மொத்த தமிழக மக்களும் விஜய் முதல்வராக வேண்டும் என்று ஓட்டு போட்டுள்ளனர். மாற்றத்தை விரும்பி ஓட்டளித்துள்ளனர்.
பாதுகாப்பு வேண்டாம் என்று விஜய் தான் கேட்டுக் கொண்டார். அதனால், தான் கான்வாய் வாபஸ் பெறப்பட்டது. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை கவர்னர் செய்வார் என்று நம்புகிறோம். இல்லையெனில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம், இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகத்தையும் நேரில் சந்தித்து நிர்மல்குமார் ஆதரவு கேட்டார்.
