நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி உறுதி
நாட்டின் வளர்ச்சியே எங்கள் தாரக மந்திரம்: பிரதமர் மோடி உறுதி
ADDED : நவ 01, 2025 01:30 PM

ராய்ப்பூர்: மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் தாரக மந்திரம் என சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலைகள், தொழில், சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் ரூ.14,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நவ ராய்பூர் அடல் நகரில் உள்ள சத்தீஸ்கர் விதான்சபாவின் புதிய கட்டடத்தில், வாஜ்பாயின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
எந்தவொரு உலகளாவிய நெருக்கடியிலும் இந்தியா எப்போதும் தீர்வு காண முன் நிற்கிறது. உலகில் எங்கும் ஒரு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், ஒரு பேரழிவு ஏற்படும் போதெல்லாம், இந்தியா உதவிகள் வழங்குவதில் நம்பகமான கூட்டாளியாக இருக்கிறது. மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதே எங்கள் தாரக மந்திரம்
மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் எங்கள் அரசு ஈடுபட்டுள்ளது. நான் பல தசாப்தங்களாக உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறேன். நான் இங்கு விருந்தினராக இல்லை; நான் உங்களில் ஒருவனாக இருக்கிறேன். இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று, சத்தீஸ்கர் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஜார்க்கண்ட் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களும் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்று பல மாநிலங்களும் தங்கள் நிறுவன தினத்தைக் கொண்டாடுகின்றன. இந்த அனைத்து மாநிலங்களின் மக்களுக்கும் அவர்களின் நிறுவன நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
குழந்தைகளுடன் உரையாடிய மோடி!
முன்னதாக, ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில் நடந்த விழாவில், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், குழந்தைகளுடன் மோடி கலந்துரையாடினார்.
இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குழந்தைகளிடம் ஆவலுடன் பேசும், போட்டோகள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

