அமெரிக்கர்களுக்கு திறமையில்லை என வாய்விட்ட டிரம்ப்; எதிர்ப்பு கிளம்பியதால் சமாளிப்பில் இறங்கியது அரசு
அமெரிக்கர்களுக்கு திறமையில்லை என வாய்விட்ட டிரம்ப்; எதிர்ப்பு கிளம்பியதால் சமாளிப்பில் இறங்கியது அரசு
ADDED : நவ 14, 2025 02:00 AM

வாஷிங்டன்: “திறமைவாய்ந்த வெளிநாட்டு தொழில் நிபுணர்கள், அமெரிக்கர்களுக்கு தேவையான பயிற்சியை அளித்துவிட்டு தங்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்பதையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார்,” என, அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின், அமெரிக்க குடியேற்ற விதிகளில் கடுமை காட்டி வருகிறார்.
அதிர்ச்சி வெளிநாட்டு நிபுணர்களை அமெரிக்க நிறுவனங்கள், 'எச்1பி' விசாவில் பணியமர்த்தி வருகின்றனர்.
இந்த விசாவில் கணினி அறிவியல், பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் திறமை வாய்ந்த வெளிநாட்டினர் பணியமர்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில், எச்1பி விசா திட்டத்தை தவறாக பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் அந்நாட்டவரின் வாய்ப்பை சிதைத்து வருவதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியதுடன், எச்1பிக்கான கட்டணத்தையும் கடந்த செப்டம்பரில் பல மடங்கு உயர்த்தி அதிர்ச்சி அளித்தார்.
மேலும், அமெரிக்க நிறுவனங்களிடம், 'அமெரிக்காவில் உற்பத்தி செய்யுங்கள்; அமெரிக்கர்களையே பணிக்கு எடுங்கள்' என்ற கோஷத்தை முன்வைத்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:
எச்1பி விசா எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் கட்டுப்பாடுகளை கொண்டு வரவில்லை.
திறமையானோர் மட்டுமே வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நம் நாட்டில் திறமைசாலிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
வேலையில்லாமல் இருப்பவர்களை நேரடியாக தொழிற்சாலைக்கு அனுப்பி ஏவுகணைகளை தயார் செய்யுமாறு கூற முடியாது. சில முக்கிய துறைகளுக்கு தேவையான திறன் நம்மிடம் இல்லை. அத்துறைகளுக்கு வெளிநாட்டு திறமையாளர்கள் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் திறமைசாலிகள் இல்லை என்றும், அத்துறைகளுக்கு வெளிநாட்டு திறமையாளர்கள் தேவை என்றும் டிரம்ப் கூறிய கருத்துக்கு அமெரிக்கர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
'அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்' என்ற அவரது கோஷத்துக்கு ஆதரவளிப்பவர்கள் உள்ளிட்ட பலர், டிரம்பின் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நோக்கம் இந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் நோக்கத்தில், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நேற்று அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது:
அதிபர் டிரம்பின் கொள்கை உத்தி, 'அறிவு பரிமாற்ற உத்தி'யாகும். இது நிரந்தர குடியேற்றத்தையோ அல்லது வேலைகளை மாற்றுவதையோ ஊக்குவிக்கவில்லை.
அதிபரின் பார்வை என்னவென்றால், திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களை உள்ளே கொண்டு வருவது, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, அமெரிக்க பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு, அவர்கள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டும். அதன்பின், அமெரிக்க பணியாளர்கள் அப்பணிக்கான முழுமையான பொறுப்பை ஏற்பர்.
தற்போது, செமிகண்டக்டர் மற்றும் கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றுக்கு திறமையான உள்நாட்டு பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை.
இதுபோன்ற துறைகளுக்கு வெளிநாட்டு பணியாளர்களை பயன்படுத்தும் ஒரு வெற்றிகரமான திட்டம்தான் இது.
அமெரிக்க தொழில்துறையின் அடித்தளத்தை கட்டமைக்க வெளிநாட்டு நிபுணத்துவத்தை பயன் படுத்தி கொள்வதையும், அதேநேரத்தில் அமெரிக்க பணியாளர்கள் அத்தொழிலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான திறன்களை பெறுவதையும் நோக்கமாகக் கொண்டது அதிபரின் திட்டம்.
இவ்வாறு தெரிவித்தார்.

