சூரிய கதிர் வீச்சு ஐரோப்பா, ஆப்ரிக்காவின் பல இடங்களில் 'கரன்ட் கட்'
சூரிய கதிர் வீச்சு ஐரோப்பா, ஆப்ரிக்காவின் பல இடங்களில் 'கரன்ட் கட்'
ADDED : நவ 13, 2025 03:46 AM
நியூயார்க்: சூரியனில் இருந்து அதிக வீரியம் வாய்ந்த கதிர் வீச்சு வெளிபட்டதால், ஐரோப்பா, ஆப்ரிக்கா கண்டம் முழுதும் தொலை தொடர்பு பாதிக்கப்பட்டது; பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள என்.ஓ.ஏ.ஏ., எனப்படும் கடல் மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் முன்னணி அறிவியல் மையம், நேற்று முன்தினம் சூரியனில் இருந்து அதிக வீரியம் வாய்ந்த கதிர் வீச்சு வெளிப்பட்டதை உறுதி செய்தது. இது, 2025ம் ஆண்டில் பதிவான வலுவான சூரிய கதிர் வீச்சு என்று அந்த மையம் தெரிவித்தது.
ஆராய்ச்சியாளர்கள் சூரிய கதிர் வீச்சை, 'ஏ, பி, சி, எம், எக்ஸ்' என ஐந்து வகைகளாக பிரித்து வைத்துள்ளனர். ஒவ்வொரு வகையும் முந்தையதை விட 10 மடங்கு ஆற்றல் கொண்டது. தற்போது எக்ஸ் - 5.1 என வகைப்படுத்தப்பட்ட சூரிய கதிர் வீச்சு நிகழ்ந்துள்ளதாக என்.ஓ.ஏ.ஏ., தெரிவித்துள்ளது.
அது, செயற்கைக்கோள் தொடர்புகள், ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் அமைப்பு மற்றும் மின்சார கட்டமைப்புகளை பாதிக்கும் திறன் கொண்டது.
அந்த வகையில், தற்போது ஏற்பட்டுள்ள சூரிய கதிர் வீச்சால், ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் ரேடியோ அலைவரிசையை தாக்கியது.
இதனால், இந்த கண்டங்களில் உள்ள பெரும்பாலான நாடுகளில் தொலை தொடர்பு வசதி பாதிக்கப்பட்டது. மேலும், மின்சார தடையும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

