அமெரிக்கா உடன் போர் பதற்றம் வீரர்களை தயார்படுத்தும் வெனிசுலா
அமெரிக்கா உடன் போர் பதற்றம் வீரர்களை தயார்படுத்தும் வெனிசுலா
ADDED : நவ 13, 2025 03:46 AM
கராகஸ்: தென் அமெரிக்கா நாடான வெனிசுலா, கடல் மார்க்கமாக தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்துஉள்ளார். கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்கள், தொழிலாளர்கள் என்றும், சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
அத்துடன், உலகின் சக்தி வாய்ந்த யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
இது, போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனால் கோபமடைந்த வெனிசுலா, பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறது.
அதன்படி, சிறப்பு அவசரநிலையை அதிபர் நிகோலஸ் அறிவித்து உள்ளார். 'பிளான் இன்டிபென்டென்சியா 200' என்ற திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து பெற்ற வான் பாதுகாப்பு அமைப்புகளும், ஏவுகணைகளும் எல்லையில் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

