அமைதியான தமிழகத்தின் அடையாளம் மாறிவிட்டது: திமுக மீது எல்.முருகன் குற்றச்சாட்டு
அமைதியான தமிழகத்தின் அடையாளம் மாறிவிட்டது: திமுக மீது எல்.முருகன் குற்றச்சாட்டு
ADDED : அக் 03, 2025 07:00 PM

சென்னை: திமுக ஆட்சியில் அமைதியான தமிழகத்தின் அடையாளமே மாறிப்போய் விட்டது என மத்திய அமைச்சர் முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராமநாதபுரத்தில் நடந்த விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளார். மத்திய அரசு மீது பல புகார்களையும் கூறியுள்ளார்.
மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களின் உரிமைகளையும் இவர்கள் இலங்கை அரசிடம் பறிகொடுத்து விட்டனர்.
கச்சத்தீவை தாரை வார்த்த அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து குலாவிக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு மீனவர்களின் நலன் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
தமிழக மீனவர் சமூகத்திற்கு துரோகத்தை செய்த திமுகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் மத்திய அரசை கேள்வி கேட்கும் தார்மீக உரிமை இல்லை. கச்சதீவை மீட்கவும், இழந்த தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும் பாஜ அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும்.
இதுபோலவே, கரூர் அப்பாவி மக்கள் பலியான விவகாரத்திலும் பாஜவை கேள்வி கேட்க, முதல்வருக்கு தார்மீக உரிமை இல்லை. சொந்த மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு முதல்வர், மணிப்பூர் பிரச்சனையைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பெருகிப் போன போதைப் பொருட்கள் வியாபாரம் என திமுக ஆட்சியில் அமைதியான தமிழகத்தின் அடையாளமே மாறிப்போய் விட்டது.
இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், மணிப்பூர் பற்றி பேசுவதை பார்த்து தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளனர். தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா என்ற அச்சத்துடன் மக்கள் நாட்களை நகர்த்தி வருகின்றனர். ஆனால் முதல்வரோ மணிப்பூர் நிலைமை பற்றி கேள்வி கேட்கிறார். காசா-விற்காக கண்ணீர் வடிக்கிறார். வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவர்.இவ்வாறு அந்த அறிக்கையில் முருகன் கூறியுள்ளார்.