தணிக்கை குறிப்பு அடிப்படையில் கூடுதல் தொகை வசூலிக்க கூடாது: பதிவுத்துறைக்கு கிடுக்கிப்பிடி
தணிக்கை குறிப்பு அடிப்படையில் கூடுதல் தொகை வசூலிக்க கூடாது: பதிவுத்துறைக்கு கிடுக்கிப்பிடி
ADDED : அக் 03, 2025 12:21 AM

சென்னை: வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி, தணிக்கை யில் குறிப்பிடப்படும் கூடுதல் தொகையை சொத்து வாங்கியவர்களிடம் வசூலிக்க, பதிவுத் துறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர், அதற்கான வழிகாட்டி மதிப்பு அடிப்ப டையில் தான் பத்திரத்தை பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த பத்திரங்களை, தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.
அதில், அவர்கள் ஏதாவது காரணம் அடிப்படையில், மதிப்பு வேறுபாடு தொகையை, 'வருவாய் இழப்பு' என, அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.
இந்த குறிப்பு அடிப்படையில், சம்பந்தப்பட்ட பத்திரத்தை தாக்கல் செய்தவரிடம், கூடுதல் தொகை வசூலிக்க சார் - பதிவாளர் நடவடிக்கை எடுக்கிறார்.
இது தொடர்பாக கடிதம் அனுப்பியும், சொத்து வாங்கியவர் கூடுதல் தொகையை செலுத்தவில்லை என்றால், அது குறித்த விபரம், அந்த சொத்தின் வில்லங்க சான்றிதழில் குறிப்பிடப்படும். இத்தொகையை செலுத்தினால் மட்டுமே, அதில் அடுத்த பரிமாற்றத்துக்கு பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
இந்நிலையில், இது தொடர்பான ஒரு வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 'தணிக்கை குறிப்பை மட்டும் ஆதாரமாக வைத்து, வேறுபாட்டு தொகையை சொத்து வாங்கியவர்களிடம் இருந்து வசூலிக்க கூடாது' என உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தணிக்கை குறிப்பு அடிப்படையில் கூடுதல் தொகை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட பத்திரத்தில் மதிப்பு வேறுபாடு குறித்து, நிர்வாக மாவட்ட பதிவாளர் விசாரணை மேற்கொண்டு, இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், மதிப்பு வேறுபாடு குறித்து விசாரிக்க, மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
இப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றினால் தான், சொத்து வாங்கியவர்களிடம் கண்மூடித்தனமாக கூடுதல் தொகை கேட்பது தடுக்கப்படும்.
நீதிமன்ற தீர்ப்பால், கூடுதல் தொகை கேட்டு, சார் - பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகள் கேள்விக்குறியாகி உள்ளன. அதே சமயம், சொத்து வாங்குவோருக்கு இதனால் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.