75 சதவீத நிதியை செலவிட்டால் மட்டுமே அடுத்த கட்ட நிதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கறார்
75 சதவீத நிதியை செலவிட்டால் மட்டுமே அடுத்த கட்ட நிதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கறார்
UPDATED : செப் 27, 2025 07:09 AM
ADDED : செப் 27, 2025 07:08 AM

புதுடில்லி: 'தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் குறைந்தது 75 சதவீத நிதியை பயன்படுத்தினால் மட்டுமே நடப்பு நிதியாண்டுக்கான அடுத்த கட்ட நிதி விடுவிக்கப்படும்' என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுதும் தூய்மையான காற்றை உறுதி செய்யும் நோக்கத்துடன் தேசிய தூய்மை காற்று திட்டம் 2019ல் துவங்கப்பட்டது. காற்றில் உள்ள தூசி மற்றும் நுண் துகள்களின் அளவை 2026க்குள், 40 சதவீதமாக குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய இலக்கு.
இந்த திட்டம் துவங்கியதில் இருந்து, 130 நகரங்களுக்கு மொத்தம், 13,236 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. அதில் 769 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில், 82 நகரங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இருந்து நேரடியாகவும், 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களுக்கு 15வது நிதிக் குழுவின் மூலம் நிதி வழங்கப்படுகிறது. இதில் எந்த நகரங்களும் இந்த நிதியை இதுவரை முழுமையாக செலவிடவில்லை. காற்று மாசு அதிகம் உள்ள புதுடில்லி ஒதுக்கப்பட்ட 71 கோடி ரூபாயில் 20 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளது. தமிழகம், 82 சதவீத நிதியை பயன்படுத்தி உள்ளது.
இந்நிலையில், 'இதுவரை வழங்கப்பட்ட நிதியில் குறைந்தது, 75 சதவீதத்தை பயன்படுத்தி இருந்தால் மட்டுமே, நடப்பு நிதியாண்டுக்கான அடுத்த கட்ட நிதி விடுவிக்கப்படும்' என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.