நிறைய நேரம் இருக்கிறது; இன்னும் பல தொழில்கள் ஆரம்பிப்பேன்: அண்ணாமலை பேட்டி
நிறைய நேரம் இருக்கிறது; இன்னும் பல தொழில்கள் ஆரம்பிப்பேன்: அண்ணாமலை பேட்டி
ADDED : நவ 13, 2025 03:02 PM

கோவை: ''நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய தொழில்கள் செய்வேன்'' என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இயற்கை விவசாய மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 19ம் தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் என்ன தவறு. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் மண்ணை சாப்பிட முடியுமா? நான் தொழில் செய்கிறேன். நான் யாரையும் மிரட்டி பணம் பறிக்கவில்லை. என்னுடைய தொழில் நான் செய்கிறேன். என்னுடைய விவசாய தொழிலை நான் செய்கிறேன்.
நான் அரசியல் செய்கிறேன். இதில் எதை நீங்கள் தவறாக பார்க்கிறீர்கள். நான் எங்கிருந்து சாப்பிடுவேன். எனது குழந்தைகளுக்கு எப்படி பீஸ் கட்டுவேன். எதை செய்ய வேண்டுமானாலும் நியாயமான முறையில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று கையை கட்டி போட்டு வைத்தீர்கள் என்றால் நான் எதை சாப்பிடுவேன். என் காருக்கு எங்கிருந்து டீசல் போடுவேன். இந்த கம்பெனியில் ஜிஎஸ்டி கட்டவில்லை சொல்லுங்க, வரி கட்டவில்லை என்றால் சொல்லுங்கள்.
யாருக்கு உரிமை இருக்கிறது?
நான் எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு இங்கு யாருக்கு உரிமை இருக்கிறது. நான் செய்யக்கூடிய தொழிலில் யாருக்கு பாதிப்பு இருக்கிறது. எந்த தொழிலை ஆரம்பிப்பதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. கட்சியில் மாநில தலைவராக நான் இல்லை. ஓடுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. என்னுடைய வேலையை செய்வதற்கு எனக்கு நேரம் இருக்கிறது. விவசாயம் செய்வதற்கு நேரம் இருக்கிறது. எனக்கு பொருள்கள் ஈட்டுவதற்கு நேரம் இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.
24 மணி நேரமும்...!
நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள். இன்னும் பல தொழில்கள் ஆரம்பிக்க தான் போகிறேன். எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. என்னால் பல விஷயங்களை செய்ய முடியும். அரசியலும் செய்வேன். 24 மணி நேரத்தை கைக்கடிகாரம் கட்டிக்கொண்டு ஓடி வேலை செய்கிறேன். நீங்களும் அதை செய்யுங்கள் என்று சொல்கிறேன்.
சோம்பேறியாக வீட்டில் இருக்காதீர்கள். நீங்களும் பல இடத்திற்கு செல்லுங்கள். வெளிநாட்டில் சென்று டெக்னிக் கற்றுக்கொண்டு இந்தியாவில் செயல்படுத்துங்கள். நன்றாக வாழுங்கள், நிம்மதியாக வாழுங்கள். உங்களது சொந்தக் காசில் வாழுங்கள். ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.
கஞ்சா புழக்கம்
முதல்வர் ஸ்டாலின் இன்றைக்கு என்ன தொழில் செய்கிறார். பணம் அவருக்கு எங்கிருந்து வருகிறது. ஒரு பக்கம் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. குற்றம் செய்தவர் திரும்பி குற்றம் செய்கின்றனர். கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடம் 40 ஆண்டுகளாக பிரச்னைக்குரிய பாதை அது.. அங்கு ஏன் போலீஸ் ரோந்து செல்லவில்லை. போலீசார் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
முதல் முறையாக நாம் இந்தியாவில் பார்க்கிறோம். குஜராத்தில் இருக்கிற டாக்டர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், குஜராத், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டில்லி உத்தரப்பிரதேசம் ஐந்து மாநிலங்களை சேர்ந்த டாக்டர்கள் குழு சம்பந்தப்பட்டிருக்கின்றனர். டாக்டர்கள் மீது மக்கள் மரியாதை வைப்பார்கள்.
அபாயகரமானது
மும்பையில் 26/11 நடந்தது போல, டில்லியில் நடந்துள்ளது. இது மிகவும் அபாயகரமானது. ஆபத்தானது. இதனால் அரசியல் கட்சிகளை தாண்டி எல்லோரும் ஒன்றாக இணைந்து இதனை கண்டிக்க வேண்டும். நாட்டிற்குள் உற்பத்தியாகும் பயங்கரவாதி நமக்கு வேண்டாம். பயங்கரவாதம் என்பது மதத்தை தாண்டியது. டில்லி செங்கோட்டை அருகே அப்பாவிகள் 13 பேர் உயிரிழந்திருப்பது மிக மோசமான ஒரு பயங்கரவாத தாக்குதல்.
அதற்கு நமது மத்திய அமைச்சரவையில் அனைவரும் ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை உளவுத்துறை உள்ளிட்ட பிரிவினர் பக்காவாக தான் இருக்கின்றனர். ஆனாலும் இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் இதற்கு தனி கவனம் கொடுக்க வேண்டும். சிறப்பான அதிகாரிகளை பணி செய்ய வைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

