சீமான் பேச்சு அரசியல் யுக்தி; சொல்கிறார் திருமாவளவன்
சீமான் பேச்சு அரசியல் யுக்தி; சொல்கிறார் திருமாவளவன்
ADDED : ஜன 04, 2026 05:07 PM

சென்னை:
ஈவெராவுடன் சீமான் என்னை ஒப்பிட்டு பேசியது ஒரு அரசியல் அணுகுமுறை அல்லது
அரசியல் யுக்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர்
கூறியதாவது; என் மீது சீமான் வைத்திருக்கும் மதிப்பீட்டுக்கு என்னுடைய
நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். ஈவெராவை ஏற்க முடியாது என்று
சொல்லிவிட்டு, சீமான் இவ்வாறு பேசுவது ஒரு அரசியல் அணுகுமுறை அல்லது
அரசியல் யுக்தியாகத் தான் பார்க்க முடிகிறது. அவர் சாமர்த்தியமாக இந்தப்
பிரச்னையை கையாளுவதாகத் தான் நான் கருதுகிறேன்.
ஈவெராவின்
பகைவர்கள் என்ன யுக்தியை கையாள்கிறார்களோ, அவரை வீழ்த்துவதற்காக போராடிக்
கொண்டிருக்கும் சக்திகள் யார் என்று அவருக்கே தெரியும். அவர்களின் நோக்கம்
நிறைவேறுவதற்கு, உங்களின் அரசியல் ஏதுவாக அமைந்துவிடக் கூடாது என்பது
தான் எங்களின் கவலை.
திக மற்றும் திமுகவோடு முரண்பாடுகள்
இருக்கலாம், அந்த இயக்கங்களின் முன்னணி தலைவர்களின் அணுகுமுறைகளில்
மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஈவெராவின் நிலைப்பாடுகளில்
முன்னுக்குப்பின் சில முரண்கள் காணக்கூடியதாக இருக்கலாம்.
விடுதலை
சிறுத்தைகள் பேசும் அரசியலுக்கு இத்தகைய தாக்குதல்கள் நிகழுமானால், இதை
எப்படி கண்டும், காணாமல் இருக்க முடியும். இதன் காரணமாகவே
எதிர்வினையாற்றுகிறோம். யார் மீதும் எங்களுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி
இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.

