ADDED : செப் 28, 2025 07:43 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (செப் 27) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
இடைநிலை ஆசிரியர் கைது
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி திரு.வி.க., அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில், பள்ளியில் பாலியல் குற்றம் நடப்பதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றது. செப்., 23ல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பள்ளியில் விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர் சிவக்குமார், ஆறாம் வகுப்பு மாணவியரிடம் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது. புகாரின்படி, குளித்தலை போலீசார், போக்சோ சட்டத்தில், சிவக்குமாரை நேற்று கைது செய்தனர்
இளைஞருக்கு '20 ஆண்டு'
ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் தீபக், 31. பைக் மெக்கானிக். திருப்பூரை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவி ஒருவருடன், அவருக்கு சமூக வலைதளத்தில் பழக்கம் ஏற்பட்டது. 2023ல், தீபக், அந்த மாணவியை திருமணம் செய்வதாக கூறி தாளவாடி பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் புகாரின்படி, அனுப்பர்பாளையம் போலீசார், போக்சோவில் தீபக்கை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில், தீபக்குக்கு, 20 ஆண்டு சிறை விதித்து, நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார்.
சிறுமி பலாத்காரம்
தேனி மாவட்டம் வருஷநாடு பகுதி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி தனது 9 வயது பேத்தியுடன் மூல வைகை ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் மாடு மேய்க்க சென்றார். சிறுமியை ஆற்றின் ஒரு கரையில் உட்கார செய்து விட்டு மறு கரையில் மாட்டை கட்டி வைக்க சென்றுள்ளார்.
திரும்பி வரும்போது அப்பகுதியில் இருந்த பெண்கள் சிலர் அங்கிருந்த ராயர்கோட்டையை சேர்ந்த லோகேந்திரன் 50, என்பவரை சத்தம் போட்டு கொண்டிருந்தனர். விசாரித்ததில் தனியாக இருந்த சிறுமியிடம் லோகந்திரன் பாலியல் பலத்காரம் செய்ததும், அந்த வழியாக வந்த பெண்கள் சிறுமியை காப்பாற்றி லோகேந்திரனை சத்தம் போட்டு விரட்டியது தெரிய வந்தது.
சிறுமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டி புகாரில் வருஷநாடு போலீசார் லோகேந்திரனை போக்சோவில் கைது செய்தனர்.
'மாஜி' போலீஸ்காரருக்கு சிறை
துாத்துக்குடி சக்திவினாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் தனசிங், 43. ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்த இவர் மீது, தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், 2017ல் காவல் துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்த சுரேஷ் தனசிங், இரண்டு சிறுமிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சிறுமிகள் புகாரின்படி, துாத்துக்குடி போலீசார், போக்சோவில் சுரேஷ் தனசிங்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.