3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆதிதிராவிடர் பள்ளிகளில் இருந்து விலகல்
3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆதிதிராவிடர் பள்ளிகளில் இருந்து விலகல்
ADDED : அக் 08, 2025 12:36 AM

மதுரை : தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் 360 தலைமையாசிரியர்கள் உட்பட 2075 பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் 3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப்பள்ளிகள், 108 உயர்நிலைப்பள்ளிகள், 98 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1138 பள்ளிகள் இயங்குகின்றன. 2024-25 கல்வியாண்டில் மொத்தம் 98,124 பேர் படிக்கின்றனர். 2023-24 கல்வியாண்டில் 1.01 லட்சம், 2022-23ல் 1.06 லட்சம், 2021-22ல் 1.23 லட்சம் மாணவர்கள் படித்தனர். ஆனால் இந்த கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது மாணவர்களின் எண்ணிக்கை லட்சத்திற்குகீழ் குறைந்துள்ளது.
இதுகுறித்து மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சில விபரங்களை பெற்றார்.
அவர் கூறியதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல ஆணையம் தந்த தகவல்படி மொத்தம் 2075 பணியிடங்கள் காலியாக உள்ளன. 360 தலைமையாசிரியர்கள், 483 பட்டதாரி ஆசிரியர்கள், 1060 இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். ஆனால் ஆர்.டி.இ., எனும் கட்டாய கல்வி உரிமைச்சட்டபடி வெறும் 875 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அரசு மழுப்பலான பதில் அளித்துள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்விக்கென நிதி வழங்குவதை அரசு தவிர்த்து வருகிறது. இதனால் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை.
இதனால் தொகுப்பூதிய அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் 829 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம். இதனால் பலர் பாதியிலேயே தனியார் பள்ளிக்கு சென்று விடுகின்றனர். இதை தவிர்க்க காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு கூறினார்.