மும்மொழி கொள்கையால் மாணவர்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக்கூடாது[ மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'அட்வைஸ்'
மும்மொழி கொள்கையால் மாணவர்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக்கூடாது[ மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'அட்வைஸ்'
ADDED : ஆக 21, 2026 01:35 AM

- டில்லி சிறப்பு நிருபர் -:
'சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில் படிக்கும், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, மும்மொழி கல்வி கொள்கையால் எந்தவித அழுத்தமும் ஏற்படக் கூடாது. நடைமுறை சிக்கல்கள் இருந்தால், உடனடியாக அவற்றை களைய வேண்டும்' என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில், கடந்த ஜூலை 1 முதல் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று மொழிகள் கற்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், இரு இந்திய மொழிகள் கட்டாயம் கற்க வேண்டும்.
இந்த மும்மொழி கொள்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அமர்வில் நேற்று இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி, ''நாடு முழுதும் 7.5 லட்சம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 4.45 சதவீதம் மட்டுமே சி.பி.எஸ்.இ., பள்ளிகள்.
''இதில் 99.19 சதவீத பள்ளிகள் ஏற்கனவே இரு இந்திய மொழிகளை கற்பிக்கும் நடைமுறையை பின்பற்றி வருகின்றன. அந்த வகையில், மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு தயாராகவே உள்ளது,'' என்றார்.
சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை யில் பயன்படுத்தப் பட்ட, 'நேட்டிவ்' என்ற சொல் காலனித்துவ ஆட்சியை நினைவுப்படுத்துகிறது என்றும், எனவே, அதற்கு பதிலாக, 'இண்டிஜினஸ்' எனப்படும் உள்நாட்டு மொழி என்ற சொல்லை பயன்படுத்துங்கள் என்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் புதிய கொள்கைகளை அமல்படுத்துவதில் உள்ள தடைகளை களைய வேண்டும். 6ம் வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டிருந்தால், நடப்பாண்டில் அதற்கு விலக்கு அளித்து, அடுத்த ஆண்டு முதல் தொடங்கலாம்.
புதிய மொழிகளை அறிமுகம் செய்யும்போது, அதை கற்பிக்க தகுதியான ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மேலும், போதிய உட்கட்டமைப்பு நிறு வப் படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இந்திய மற்றும் வட்டார மொழிகள் மீது தாழ்வு மனப்பான்மை கொள்ளக் கூடாது. அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையால் எந்த அழுத்தமும் ஏற்படக் கூடாது. நடைமுறை சிக்கல்கள் இருந்தால், உடனடியாக அவற்றை களைய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
