ADDED : நவ 09, 2026 05:58 AM

சென்னை: 'தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை: நேற்று காலை 8:30 வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை பாரிமுனை மற்றும் மதுரவாயல் பகுதிகளில் அதிகபட்சமாக 9 செ.மீ., மழை பெய்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, சென்னை நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை மற்றும் துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அத்துடன், தமிழக தென் மாவட்டங்கள் வழியாக, மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யலாம்.
நீலகிரி, கோவை, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தின் மற்ற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
