UPDATED : நவ 01, 2025 05:39 AM
ADDED : நவ 01, 2025 04:59 AM

ஓமலுார்: ''கட்சியில் இருந்த துரோகிகள் போய்விட்டனர்; நிம்மதி ஏற்பட்டுள்ளது,'' என, கட்சியினரிடம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள, அ.தி.மு.க., சேலம் புறநகர் கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நிர்வாகிகளுடன் பேசும்போது கூறியதாவது:
தமிழக சட்டபை தேர்தலுக்கு நாட்கள் அதிகம் இல்லை. குறைந்த நாட்களே இருப்பதால், கட்சியினர் தேர்தலை நோக்கி சுறுசுறுப்பாக வேண்டும். கட்சிக்குள் நெரிஞ்சி முள்ளாக சிலர் இருந்தனர். அவர்களை எப்படி அகற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். அவர்களாகவே தவறு செய்து விட்டு, தங்களை துரோகிகள் பக்கம் இணைத்துக் கொண்டு வெளியேறி விட்டனர். இனி அவர்கள் அனைவரும் நம்முடைய எதிரிகள் தான்.
இனி அவர்கள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். துரோகிகளோடு கைகோர்த்த பின், அவர்களை கட்சிக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதால் தான், கட்சியில் இருந்து நீக்கி விட்டேன். ஒருவிதத்தில் இப்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளது. மேலும், பலமான கூட்டணிக்கு வேகமாக பணிகள் நடக்கின்றன. கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

