'வங்காளிகளை தவறாக பேசினால் வாயிலேயே ஆசிட் ஊற்றுவேன்' பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு திரிணமுல் பிரமுகர் மிரட்டல்
'வங்காளிகளை தவறாக பேசினால் வாயிலேயே ஆசிட் ஊற்றுவேன்' பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு திரிணமுல் பிரமுகர் மிரட்டல்
ADDED : செப் 07, 2025 11:46 PM

மால்டா: “வங்காளிகள் குறித்து தவறாக பேசினால், வாயிலேயே ஆசிட் ஊற்றி விடுவேன்,” என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் பக்சி மிரட்டல் விடுத்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், வங்க மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக பல மாநிலங்களில் நடவடிக்கை எடுப்படுவதைக் கண்டித்து, திரிணமுல் காங்., சார்பில் மேற்கு வங்கத்தின் மால்டாவில் போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற அந்த மாவட்ட திரிணமுல் காங்., தலைவர் அப்துர் ரஹிம் பக்சி, பா.ஜ., - எம்.எல்.ஏ., சங்கர் கோஷின் பெயரை குறிப்பிடாமல் அவருக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
'மேற்கு வங்கத்தில் இருந்து புலம்பெயரும் தொழிலாளர்கள் அனைவரும் ரோஹிங்கியாக்கள் அல்லது வங்கதேசத்தவர்' என, சமீபத்தில் கோஷ் கருத்து தெரிவித்திருந்தார். இதை மேற்கோள் காட்டி பக்சி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் இருந்து பிற மாநிலங்களில் பணியாற்றும் 30 லட்சம் பேரும் வங்காளிகள் அல்ல என, கூச்சமே இல்லாமல் ஒருவர் கூறுகிறார். அவர்கள் எல்லாம் ரோஹிங்கியாக்களாம்; வங்கதேசத்தவராம்.
இன்று நான் ஒன்றை கூற விரும்புகிறேன். மீண்டும் இப்படி ஒரு வார்த்தை என் காதில் விழுந்தால், அதை சொல்லியவரின் வாயில் ஆசிட்டை ஊற்றி, அவரது குரலை நசுக்கி விடுவேன். இது மேற்கு வங்கம்; நாங்கள் வங்காளிகள். இப்படி பேசுவதை ஒருபோதும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். ஆசிட் ஊற்றி அப்படி பேசுபவரின் முகத்தை பொசுக்கிவிடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பக்சியின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 'ஆளுங்கட்சி வன்முறையை துாண்டும் வகையில் நடந்து கொள்கிறது' என, மால்டா உத்தர் தொகுதியின் பா.ஜ., - எம்.பி., காஹேன் முர்மு கண்டித்துள்ளார்.