வெற்றி கிடைத்தால் தேர்தல் முறையை நம்புவதும் தோல்வி கண்டால் துாற்றுவதும் ஜனநாயகமல்ல: ராகுலுக்கு பா.ஜ., 'அட்வைஸ்'
வெற்றி கிடைத்தால் தேர்தல் முறையை நம்புவதும் தோல்வி கண்டால் துாற்றுவதும் ஜனநாயகமல்ல: ராகுலுக்கு பா.ஜ., 'அட்வைஸ்'
ADDED : டிச 15, 2025 12:29 AM

புதுடில்லி: ''தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, தேர்தல் கமிஷனை நம்ப வேண்டும் என்ற மனப்பான்மை, ஜனநாயகத்திற்கு பாதகமானது,'' என பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலை வர் அமித் மாள்வியா விமர்சித்துள்ளார்.
கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
அபார வெற்றி
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்றது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில், 50 இடங்களை கைப்பற்றி பா.ஜ.,வும் வெற்றியை ருசித்தது. இந்நிலையில், 'உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசின் வெற்றி, மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் கருத்து கூறியிருந்தார். மேலும், வெற்றிக்காக பாடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களையும் ராகுல் பாராட்டினார்.
இதுகுறித்து பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியதாவது: தேர்தல் முடிவுகள் பாதகமாக வெளியானால் போதும், உடனடியாக தனது வழக்கமான பாணியை ராகுல் கையாள ஆரம்பித்து விடுவார். மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு, ஓட்டு திருட்டு என வசைபாடுவார்; தேர்தல் முறைகளையே கேள்வி கேட்பார்.
அதே நேரத்தில் தங்களுக்கு சாதகமாக முடிவுகள் வந்துவிட்டால், குறை சொன்ன அந்த தேர்தல் முறை யை அப்படியே அவர் ஏற்றுக் கொள்வார். அது பற்றி எந்த விமர்சனத்தையும் முன் வைக்க மாட்டார். வெற்றி பெற்றால் மட்டுமே தேர்தல் முறைகளை நம்புவேன் என்பது ஜனநாயகம் அல்ல. அப்படியான நம்பிக்கையில் ஜனநாயகம் நிச்சயம் இயங்காது.
வெற்றி என்றால் தேர்தல் முறையை கொண்டாடுவதும், தோல்வி என்றால், அதே தேர்தல் முறை மீது சேற்றை வாரி வீசுவதும் தவறானது. இப்படியான அணுகுமுறை ஜனநாயகத்தை வலுப்படுத்தாது. மாறாக, மக்களிடையே ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும்.
விமர்சனம்
நம்பகமான மாற்று கட்சியாக உருவாக வேண்டும் என விரும்பினால், முதலில் என்ன நடந்தாலும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். தேர்தலில் தொடர்ந்து பங்கெடுத்த பின், அதன் மு டிவுகள் பற்றி ஆதாரம் இல்லாமல் கேள்விகளை கேட்பது அரசியல் நேர் மையை கேலி கூத்தாக்கிவிடும். ஜனநாயக நெறிமுறைகளையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
ஒரு தலைவரை பற்றியோ, கட்சியை பற்றியோ இந்த விமர்சனத்தை முன் வைக்கவில்லை. நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும் நேர்மையான அரசியல் பற்றி எதிர்க்கட்சி ஆழமாக சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்தை பகிர்கிறோம். ஜனநாயகம் வெறும் சாக்குப்போக்குகளை கோராது; தோல்வியையும் மதிக்கும் தலைமை பண்பை தான் கோருகிறது. அதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

