தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தவெக எம்.எல்.ஏ.,க்களிடம் ராஜினாமா கடிதம்? கடிவாளம் போட முதல்வர் விஜய் நடவடிக்கை

தவெக எம்.எல்.ஏ.,க்களிடம் ராஜினாமா கடிதம்? கடிவாளம் போட முதல்வர் விஜய் நடவடிக்கை

தவெக எம்.எல்.ஏ.,க்களிடம் ராஜினாமா கடிதம்? கடிவாளம் போட முதல்வர் விஜய் நடவடிக்கை

12


UPDATED : நவ 12, 2026 12:32 AM

ADDED : நவ 12, 2026 12:20 AM

Follow on GoogleFavourite on Google

12

UPDATED : நவ 12, 2026 12:32 AM ADDED : நவ 12, 2026 12:20 AM


12
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் த.வெ.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிவாளம் போடும் வகையில், அவர்களிடம் முதல்வர் விஜய் ராஜினாமா கடிதங்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க., அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழலை குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

அதிருப்தி


இது, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கொலை சம்பவங்கள் அதிகரிப்பு போன்றவை, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், த.வெ.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

இந்நிலையில், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை வளைத்து, ஆட்சியை கவிழ்க்க. தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பில் முயற்சி நடப்பதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்களை அழைத்து பேச, முதல்வர் விஜய் திட்டமிட்டார்.

சந்தித்தார்


அதன்படி, மாமல்லபுரம் அடுத்த பேரூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர் விஜய் நேற்று மாலை சந்தித்தார். முன்னதாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.

வேறு நிகழ்ச்சிகள் காரணமாக அமைச்சர் ஸ்ரீநாத், மெக்கா சென்றதால், எம்.எல்.ஏ., மதார் பதுருதீன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், கொளத்துார் எம்.எல்.ஏ., பாபு மற்றும் சபாநாயகர் பிரபாகர் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம், வெற்றுத் தாளில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. கட்சிக்கும், அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, ராஜினாமா கடிதம் தயாரிக்க, கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

வேட்டி, புடவை


முதல்வர் விஜய் வருவதற்கு முன்பே, கையெழுத்து பெறும் பணியை, த.வெ.க., தலைமை அலுவலக நிர்வாகிகள் முடித்துள்ளனர். விஜய் வந்ததும், எம்.எல்.ஏ.,க்களுக்கு பட்டு வேட்டி, புடவை பரிசளித்துள்ளார்; மேலும், எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகளை கேட்டுள்ளார்.

அப்போது, 'அரசு நிகழ்ச்சிகளில் கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், தங்களை கண்டுகொள்வது இல்லை' என சில எம்.எல்.ஏ.,க்கள் புகார் கூறியுள்ளனர். அவர்களுக்கு, முதல்வர் விஜய் அறிவுரை கூறியுள்ளார். சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ.,க்களை தனியாக அழைத்து பேசினார்.

இது குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது: விரைவில், ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை இல்லை. அரசை கவிழ்க்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுகின்றன. இதை, எம்.எல்.ஏ.,க்கள் கவனத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடக் கூடாது.

சட்டசபையில் மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது. தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டால், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மீது அவதுாறு பரப்பி, அரசை முடக்க முயற்சி நடப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. தவறுகளை திருத்திக்கொள்ள, இறுதி வாய்ப்பு வழங்குகிறேன். அதையும் மீறி தவறு செய்தால், கடும் நடவடிக்கை உறுதி என, முதல்வர் விஜய் கூறினார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் அளித்த 'ரிப்போர்ட்'


டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐ.ஜி., அஸ்ரா கார்க் ஆகியோர் நேற்று முதல்வர் விஜயை தனியாக சந்தித்தனர். அப்போது, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆறு மாத செயல்பாடு குறித்த அறிக்கையை வழங்கி உள்ளனர். அதில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுடன், சில எம்.எல்.ஏ.,க்கள், தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆட்டோக்களில் சுற்றிய எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தற்போது சொகுசு கார் வாங்கியிருப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. மேலும், நீர்வளம், ஊரக வளர்ச்சி துறை ஒப்பந்ததாரர்களிடம் சிலர், 10 சதவீத கமிஷன் கேட்பதோடு, பூஜை போடும்போதே, கமிஷன் தொகையில், 80 சதவீதத்தை வசூலிப்பதாகவும், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், தொழிற்சாலைகளில் வசூல் வேட்டை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர் விஜய் கடுமையாக எச்சரித்து உள்ளார்.



அலைக்கழிக்கப்பட்டனர்


கூட்டத்தில் பங்கேற்க, காலையிலேயே வந்த எம்.எல்.ஏ.,க்களை, ஹோட்டல் உள்ளே அனுமதிக்கவில்லை. அதே நேரம், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள, த.வெ.க., பொதுச் செயலரான அமைச்சர் ஆனந்த் வீட்டில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் ஆனந்த் வீட்டிற்கு சென்றனர். மற்றவர்கள், எங்கு செல்வது என தெரியாமல் தவித்தனர். பின், அனைவரும் ஹோட்டலுக்கு செல்லுமாறு கூறப்பட்டது. கூட்டம் பற்றி முறையான தகவல் இல்லாததால், எம்.எல்.ஏ.,க்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.



பொதுப்பணி துறைக்கு 'நோ'


பிரதமர், முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில், மேடை, ஒலி, ஒளி, தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகளை, பொதுப்பணித் துறையினர் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, நட்சத்திர ஹோட்டலுக்கு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் அடங்கிய குழுவினர் சென்றுள்ளனர்.
அவர்களை, த.வெ.க., தலைமை நிர்வாகிகள் திருப்பி அனுப்பி விட்டனர்; தீயணைப்பு துறை அதிகாரிகளையும் அனுமதிக்கவில்லை. கூட்டம் நடந்த ஹோட்டலின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருந்ததால், வெளியிலிருந்து யாரும் பார்க்க முடியாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us