கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபியை சந்திக்கும் நடிகர் விஜய்!
கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபியை சந்திக்கும் நடிகர் விஜய்!
ADDED : அக் 08, 2025 11:49 AM

சென்னை: கரூர் செல்ல அனுமதி கேட்டு தவெக தலைவர் நடிகர் விஜய் தரப்பில் டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
போன சனிக்கிழமை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, 41 உயிர்கள் பலியாகின. அதற்காக மக்களை கரூர் வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக அனுமதி கேட்டு, நடிகர் விஜய் ஒரு கடிதத்தை நேற்று இ மெயில் மூலமாக அனுப்பி உள்ளார். இன்று அதை நேரிலும் கொடுப்பார்.
அதற்கு முன்னதாக நடிகர் விஜய் அவர்களிடம் (கூட்ட நெரிசலில் பலியான பாதிக்கப்பட்டவர்களின் தரப்பை குறிப்பிடுகிறார்) வீடியோ காலில் பேச வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதனால் நேற்று முன்தினம், நேற்று கரூரில் இருக்கும் 33 பேரிடம் அவர் வீடியோ கால் மூலமாக பேசினார், ஆறுதலை சொன்னார்.
என்னதான் ஆறுதல் சொன்னாலும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. இருந்தாலும் நான் வந்து உங்க கூட இருப்பேன், விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொன்னார். இப்போது கரூரைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் வீடியோ காலில் பேசுவார்.
எல்லாரும் என்ன சொன்னாங்கன்னா.. சார் (நடிகர் விஜய்) உங்க மேல தப்பு இல்லை, நீங்க வந்து தைரியமாக இருக்கணும், உங்க ஆறுதலுக்கு நன்றி, நீங்க சொன்ன வார்த்தைகள் எங்களுக்கு ஆறுதலாக இருக்கு. விடாதீங்க, தொடர்ந்து fight பண்ணுங்க, நாங்கள் எப்பவும் உங்க கூட இருப்போம் என்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி எல்லா மக்களும் அதையே தான் சொன்னாங்க.
டிஜிபிக்கு இமெயில் மூலம் லெட்டர் கொடுத்தாச்சு. எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணணும் என்று நாங்க ஒரு கோ ஆர்டினேஷன் (co ordination) மீட்டிங் கேட்டு இருக்கோம். இன்னொரு முறை இதுபோன்ற அசம்பாவிதம் நடக்கிறது யாருக்குமே நல்லது இல்லை. எனவே ஒரு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவர்களை (பாதிக்கப்பட்டவர்கள்) சந்திக்க வேண்டும் என்பது தான் நடிகர் விஜய்யின் விருப்பம்.
விஜய்யின் மீது மிகுந்த அன்பு கொண்டதால் கூட்டத்திற்கு வந்திருந்தனர். யாரும் அவர் மீது தப்பு சொல்லவில்லை. அதுதான் உண்மை. மனசு விட்டுவிட வேண்டாம், தைரியமாக இருங்க என்று அனைவருமே சொன்னார்கள். ஒருவருக்குமே கட்சி மீதோ, நடிகர் விஜய் மீது தவறான எண்ணம் ஏதும் இல்லை. அதுதான் உண்மை. என்ன நடந்திருக்கும் என்று ஒரு எண்ணங்கள் இருக்கு, சில நம்பிக்கைகள் இருக்கு.
விசாரணை முடிந்த பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது தெரிய வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நேரத்தில் அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று நாங்கள் கருத்து சொன்னால் அது சரியாக இருக்காது. விசாரணை நடக்கட்டும், அதை பார்க்கலாம்.
இவ்வாறு அருண்ராஜ் பேட்டியளித்தார்.