இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிரிட்டனைச் சேர்ந்த இருவர் கைது
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிரிட்டனைச் சேர்ந்த இருவர் கைது
ADDED : நவ 15, 2025 10:29 PM

பஹ்ரைச்: நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிரிட்டனைச் சேர்ந்த இருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் கூறியதாவது; பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே டாக்டர்கள். நேபாளத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ருபைதேஹா என்ற எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
எஸ்எஸ்பியின் 42-வது பட்டாலியன் தளபதி கங்கா சிங் உதாவத் கூறுகையில், ' எல்லைக்குள் ஊடுருவிய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இருவரிடமும் எந்த விசாவும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களில் ஹசன் அம்மான் சலீம்,35, என்பவர் பாகிஸ்தான் வம்சாவளி ஆவார். இவர் தற்போது பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் வசித்து வருகிறார்.
கைது செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெயர், சுமித்ரா ஷகீல் ஒலிவியா,61. இவரது தாயார் கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர். இவர் பிரிட்டனின் குளுஸ்டர் நகரில் வசித்து வந்துள்ளார். நேபாளத்தின் நேபாள்கஞ்சில் உள்ள ஒரு மருத்துவமனை விடுத்த அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளனர். ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்ததற்கு சரியான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை,' என்றார்.
கடந்த10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

