சுப்ரியா சாகுவுக்கு ஐநா விருது: தமிழகம் பெருமை கொள்கிறது என முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சுப்ரியா சாகுவுக்கு ஐநா விருது: தமிழகம் பெருமை கொள்கிறது என முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
ADDED : டிச 11, 2025 09:48 AM

சென்னை: ஐநாவின் உயரிய விருது பெற்ற, தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐநாவின் உயரிய விருதான ''சாம்பியன்ஸ் ஆப் எர்த்'' விருது சுப்ரியா சாகுவுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இவ்விருது இயற்கை பாதுகாப்பில் அவர் காட்டும் ஊக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது, தமிழகம் பெருமை கொள்கிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழகம் சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐநாவின் 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்'' விருதினை வென்றுள்ள தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு எனது பாராட்டுகள்!
சதுப்பு நிலம் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
யார் இந்த சுப்ரியா சாகு?
* உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றியவர். இவர் கலெக்டராக இருந்த போது தான், அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
* சுப்ரியா சாகு, தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல் ஆகவும், இன்கோசர்வ் முதன்மை செயல் அதிகாரியாகவும், சுகாதாரத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
* தற்போது, அவர் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி வகிக்கிறார். தற்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்குத் தலைமை தாங்குகிறார்.
* இவரது கணவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

