விமர்சனத்தை தாங்க முடியாமல் பொய் வழக்கில் சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு மார்கண்டேய கட்ஜூ கண்டனம்
விமர்சனத்தை தாங்க முடியாமல் பொய் வழக்கில் சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு மார்கண்டேய கட்ஜூ கண்டனம்
UPDATED : டிச 15, 2025 11:22 PM
ADDED : டிச 15, 2025 11:09 PM

புதுடில்லி: ''விமர்சனத்தை சகித்துக் கொள்ள விரும்பாமல் சவுக்கு சங்கரை அப்பட்டமாக புனையப்பட்ட , ஜோடிக்கப்பட்ட மற்றும் இட்டுக்கட்டி, மிரட்டி பணம் பறித்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்,'' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
கைது
நேற்று முன்தினம் ( டிச.,13) மதுபான 'பார்' உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரில், 'யு டியூபர்' சவுக்கு சங்கரை, அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊழல்
கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ எழுதிய கட்டுரை ஒன்றில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளது. ஆனால், சமீப நாட்களாக இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஊழல் இல்லாமல் எதுவும் நடக்காத மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் ஆளப்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.
காமராஜர் முதல்வராக இருந்தபோது இருந்த தமிழகத்தின் பொற்காலத்தை, இந்தியாவின் சிறந்த மாநிலம் என முன்னாள் பிரதமர் நேருவால் புகழப்பெற்றது. தற்போது அதற்கு மாறுபட்ட நிலை நிலவுகிறது. நேர்மைக்கு ஒரு உதாரணமாக காமராஜர் திகழ்ந்தார்.
பாசிச ஆட்சி
தங்கள் ஊழல் மற்றும் பிற தவறுகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையோ அல்லது விமர்சனத்தையோ சகித்துக்கொள்ள விரும்பாத ஆளும் புதிய பாசிச திமுக ஆட்சி, மாற்றுக்குரலையும் அடக்குவதற்காக மாநிலத்தில் ஒரு பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளர், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் திமுக அரசை கண்டித்ததுடன், சவுக்கு சங்கரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
'' தங்களுக்கு சாதகமாக இல்லாத பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது அரசு இயந்திரத்தை பயன்படுத்துகிறது,'' எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டினார். மேலும் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும், இந்த கைது நடவடிக்கையை கண்டித்ததுடன், திமுக அரசை பாசிச அரசு என விமர்சனம் செய்தார். கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்பி கார்த்தியும் சவுக்கு சங்கரின் கருத்துகளில் வேறுபட்டு இருந்த போதிலும் அவரை கைது செய்தது அப்பட்டமான துன்புறுத்தல் என விமர்சனம் செய்தார்.
சவுக்கு சங்கர் கைதுக்கு பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளார். '' ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளன, ஆனால் அது பாஜ, திமுக அல்லது சிபிஎம் அரசாக இருந்தாலும், அவர்களில் யாரும் இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. நீதிமன்றங்களும் இதை அரிதாகவே கேள்வி கேட்கின்றன. அரசை விமர்சனம் செய்ததால் தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக அரசுக்கு எதிராக செயல்படும் சில போலீசார், மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே சவுக்கு சங்கர் போன்றவர்களை கைது செய்கின்றனர். இதை திமுக கவனத்தில் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
வேண்டுகோள்
இந்த இழிவான மற்றும் அருவருப்பான செயலை கண்டித்து சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இவ்வாறு அதில் கட்ஜூ கூறியுள்ளார்.

