பார்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு; ராகுல் விமர்சனமும், பாஜ பதிலடியும்!
பார்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு; ராகுல் விமர்சனமும், பாஜ பதிலடியும்!
ADDED : டிச 11, 2025 01:09 PM

புதுடில்லி: பார்லியில் நான் விடுத்த சவாலுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ அமித்ஷாவிடம் எந்த பதிலும் இல்லை என நிருபர்களிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்தார். இதற்கு, '' உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சால் முழு நேரு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது'' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
பார்லிமென்டில், தேர்தல் சீர்திருத்தம் குறித்த நேற்றைய விவாதத்தின் போது, 'சுதந்திர இந்தியாவில் முதல் ஓட்டு திருட்டில் ஈடுபட்டது முன்னாள் பிரதமர் நேரு' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார். இதற்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பதிலளித்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ராகுல் பேட்டி
இது தொடர்பாக இன்று நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: பார்லிமென்டில் எஸ்ஐஆர் விவாதத்தின் போது, நேற்று நான் இடைமறித்து பேசியதில் அமித்ஷா பதற்றம் அடைந்தார். அவர் பார்லிமென்டில் தவறான வார்த்தைகளை பிரயோகப்படுத்தினார். எனது குற்றச்சாட்டுகளை மறுத்து அமித்ஷா பதிலோ, ஆதாரங்களோ வழங்கவில்லை.
நாங்கள் வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஓட்டு திருட்டு ஆதாரங்களை வெளியிட்டோம். அமித்ஷாவை நேரடி விவாதத்துக்கு அழைத்து சவால் கூட விட்டேன். நான் விடுத்த சவாலுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ அமித்ஷாவிடம் எந்த பதிலும் இல்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.
பாஜ பதிலடி
இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: பார்லிமென்டில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசி கொண்டிருக்கும் போது ராகுல் வெளிநடப்பு செய்கிறார். இதுதான் அவரது ஜனநாயகம்.
உண்மையை கேட்க அவருக்கு வலிமை இல்லை. இந்த பழக்கத்தை ராகுல் கைவிட வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சால், முழு நேரு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது. இவ்வாறு கிரிராஜ் சிங் கூறினார்.

