மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
UPDATED : அக் 06, 2025 05:52 AM
ADDED : அக் 06, 2025 02:28 AM

சென்னை: 'டெல்டா மாவட்டங்களில், மழையில் நனையும் நெல் மூட்டைகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நா கப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு, 6.09 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. வழக்கமான சாகுபடி பரப்பை விட இது, 2 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகம்.
நெல் அறுவடை துவங்கி நடந்து வருகிறது. அறுவடை இயந்திர பற்றாக்குறை நிலவுவதால், கூடுதல் வாடகை வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கூடுதல் வாடகை வசூல் செய்தால், இயந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவாரூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர, வேளாண் வணிக பிரிவினருக்கு, துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், வாடகைக்கு போதிய அளவில் இயந்திரங்களை, வேளாண் வணிக பிரிவினர் ஏற்பாடு செய்யவில்லை. அறுவடையின் போதே, நடப்பாண்டு நெருக்கடியை சந்தித்துள்ள டெல்டா விவசாயிகள், அவற்றை அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதற்குள், படாதபாடு பட்டு வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த பின்னரும், கொள்முதல் மையங்களில் மூட்டைக்கு, 40 ரூபாய் கமிஷன் வசூல் தொடர்கிறது. டெல்டா மாவட்டங்களில், சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஈரப்பதத்தை காரணம் காட்டி, நெல் கொள்முதல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே, பல டன் நெல் மூட்டைகள், மழையில் நனையாத வகையில் தார்ப்பாய் போட்டு மூடிவைக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து அங்கேயே மூட்டைகள் இருந்தால், ஈரப்பதம் அதிகரித்து நெல்மணிகள் முளைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அரசு கிடங்குகள் மட்டுமின்றி, தனியார் கிடங்குகளிலும் நெல் மூட்டைகளை பாதுகாக்க, டெல்டா மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார்.
மழையால் கொள்முதல் பணிகள் முடங்கியதால், நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும், கிடங்குகளுக்கும் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.
கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை, கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கிடங்குகளிலேயே நெல் மூட்டைகளை எடை போட்டு, கொள்முதல் செய்ய வேண்டும்.
கொள்முதல் முறைகேடு குறித்து பேசினால், அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். அதனால், பெயரை சொல்லி பேட்டி கொடுக்க முடியாத நி லையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.